‘2026 சட்டமன்ற தேர்தலுக்கு தே.மு.தி.க. தயாராக உள்ளது’ - பிரேமலதா விஜயகாந்த்

தே.மு.தி.க. மாநாட்டில் ஒரு நல்ல அறிவிப்பை வெளியிட இருக்கிறோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“2026 சட்டமன்ற தேர்தலுக்கு தே.மு.தி.க. தயாராக உள்ளது. ஜனவரி மாதம் 9-ந்தேதி கடலூரில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் தயாராகி வருகின்றனர். இந்த மாநாட்டில் நிச்சயமாக ஒரு நல்ல அறிவிப்பை நாங்கள் வெளியிட இருக்கிறோம்.
தை பிறந்தால் வழி பிறக்கும். அதே போல் தமிழ்நாட்டின் அரசியலுக்கும் நிச்சயமாக நல்லதொரு வழி பிறக்கும். அனைத்து கட்சிகளும் எங்களுக்கு தோழமை கட்சிதான். அந்த நட்பின் அடிப்படையில் எல்லோருடனும் நாங்கள் பேசி வருகிறோம். இருப்பினும் கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் இறுதி செய்யப்படவில்லை. கூட்டணி முடிவு செய்யப்பட்ட பின்னர் அது தொடர்பான அறிவிப்பை உரிய நேரத்தில் வெளியிடுவோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






