கோவை,
கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் மூத்த மறைந்த வழக்கறிஞர் நடன சபாபதியின் திருவுருவப்படம் திறக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, "நாம் எடுக்கும் வழக்கு சரியா? தவறா? என வழக்கறிஞர்கள் முடிவு செய்வதை விட நீதிமன்றத்திடம் கொடுத்து விட வேண்டும். அங்குள்ள வழக்கறிஞர்கள் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான அறிக்கை பற்றிய என்னிடம் கேட்டார்கள். நீங்கள் சொல்லும் முடிவை எப்படி எடுத்துக் கொள்வது என்றும் கேட்டார்கள்.
அதற்கு நான் சொல்வது என்னவென்றால், ஜெயலலிதாவின் வயது 68, உயரம் 5 அடி, எடை 100 கிலோ, சர்க்கரை அளவு 228 மில்லிகிராம், பி.பி. 160, கிரியேடின் 0.82, ஒ.பி சிட்டி, சுகர், பிபி இதற்கு அறுவை சிகிச்சை செய்யலாமா என்பதுதான் முக்கிய விசயம். அவரது உடற்பருமன், சர்க்கரை அளவு , ரத்த அழுத்தம் இதற்கு அறுவை சிகிச்சை செய்யலாமா என்பதுதான் பாயிண்ட்.
இதை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என தெரிவித்தேன். லேப்டாப் முன் உட்காருங்கள், இதனை எழுதுங்கள். இதனை கம்ப்யூட்டரில் அடியுங்கள். இதே மாதிரி ஒருவர் உயிருடன் இருப்பது போல ஒரு மருத்துவரை வைத்து உலகில் உள்ள எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். முடிவு எதுவாக இருக்கும் என்று நீங்களே ஆய்வின் அறிக்கையை பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவித்தேன்" என்று அவர் கூறினார்.