தமிழக செய்திகள்

பேரறிவாளனுக்கு விடுப்பு கேட்ட அற்புதம்மாள் மனுவை சிறைத்துறைக்கு அனுப்பியது ஏன்? - தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

பேரறிவாளனுக்கு விடுப்பு கேட்ட அற்புதம்மாள் மனுவை சிறைத்துறைக்கு அனுப்பியது ஏன்? என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு, உடல்நலம் சரியில்லாததால், அவருக்கு விடுப்பு வழங்கக்கோரி தமிழக அரசுக்கு அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை மனு அனுப்பினார். இந்த மனு பரிசீலிக்கப்படாததால், ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் பிரபாவதி, மனுதாரர், பேரறிவாளனுக்கு விடுப்பு கேட்டு முதலில் அரசுக்கு தான் மனு அனுப்பினார். அந்த மனு சிறைத்துறை பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அரசுக்கு அந்த கோரிக்கை மனுவை திருப்பி அனுப்பியுள்ளதாக சிறைத்துறை தரப்பில் கூறப்படுகிறது என்றார்.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அற்புதம்மாளின் மனு குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கே முழு அதிகாரம் உள்ள நிலையில், அந்த அதிகாரத்தை பயன்படுத்தி பரிசீலிக்காமல், இந்த மனுவை சிறைத்துறைக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். பின்னர், இதுகுறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 31-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது