தமிழக செய்திகள்

விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.

விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் புகழேந்தி அவர்கள் எதிர்பாராத வகையில் மறைவுற்ற நிகழ்வு, மிகவும், அதிர்ச்சியும் வேதனை தருகிறது.

கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர், தன் உடல்நலன் பற்றியெல்லாம் சிந்திக்காமல் கழகத்தின் வெற்றிக்காகத் தேர்தல் பணிகளை ஆற்றி வந்தார். நேற்றைய என்னுடைய பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவர், சற்றே மயக்கம் வர, மருத்துவமனைக்குச் சென்றார்.

உடனடியாக நானும் மருத்துவர்களைத் தொடர்புகொண்டு, அவரது உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். நலன் பெற்று மீண்டு வருவார் என்று நம்பியிருந்த நிலையில், அவர் நம்மைவிட்டு பிரிந்த செய்தி வந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

1973-ல் கழகத்தின் கிளைச் செயலாளராகத் தமது அரசியல் வாழ்வைத் தொடங்கிய புகழேந்தி அவர்கள், தமது அயரா உழைப்பாலும், மக்கள் பணியாலும் படிப்படியாக வளர்ந்து, கழகத்தின் மாவட்டச் செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் உயர்ந்தார்.

1996-ல் ஒன்றியத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான பணிகளை மேற்கொண்டவர். விக்கிரவாண்டி தொகுதி மக்களோடு, மக்களாக இருந்து அவர்களுக்கான அனைத்துப் பணிகளையும் அக்கறையுடன் மேற்கொண்டு வந்த புகழேந்தி அவர்களைச் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்து அந்த மக்கள் அனுப்பி வைத்தனர்.

எப்போது என்னைச் சந்திக்க வந்தாலும், தொகுதி மக்களுக்கான கோரிக்கைகளுடன்தான் வருவார். அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுச் செல்வார். கழகத் துணைப் பொதுச் செயலாளர் முனைவர் க.பொன்முடி அவர்களுக்கு உற்ற துணையாக விளங்கி - மக்களோடு மக்களாக வாழ்ந்த புகழேந்தி அவர்களது மறைவு, விக்கிரவாண்டி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் மட்டுமின்றி, கழகத்திற்கும் பேரிழப்பாகும்.

ஈடுசெய்ய முடியாத அவரது பேரிழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்