தமிழக செய்திகள்

விரைவில் ஆயிரம் ரூபாயை எட்டிவிடும்: சமையல் கியாஸ் விலை ரூ.25 உயர்ந்து ரூ.835-க்கு விற்பனை

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை நேற்று ரூ.25 உயர்ந்து ரூ.835-க்கு விற்பனை செய்யப்பட்டது. விரைவில் ஆயிரம் ரூபாயை தொட்டு விடும் என்பதால் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் மாதம் 20 லிட்டர் மண்எண்ணெய் தரவேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி, சமையல் கியாஸ் சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகிறது. ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை பொதுவாக மாதத்தில் முதல் மற்றும் பிற்பாதியில் மாற்றியமைக்கப்படும். சில சமயங்களில் இடையில் கூட மாற்றியமைக்கப்படும்.

குறிப்பாக கடந்த மாதம் வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்ட 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக மானியமில்லாத சிலிண்டர் விலை கடந்த மாதம் 3 முறை உயர்த்தப்பட்டது. இதன் மூலம் கடந்த மாதம் மட்டும் சமையல் கியாஸ் சிலண்டர் விலை ரூ.100 உயர்ந்து ரூ.810 ஆக விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று மீண்டும் ரூ.25 விலை அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.835 ஆக உயர்ந்தது.

உயர்வு ரத்து

இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெட்ரோல், டீசலுக்கு விலை நிர்ணயம் செய்வதைப் போன்று, சமையல் எரிவாயு உருளைக்கும் நாள்தோறும் விலையைத் தீர்மானிக்கும் வகையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி, மக்களை சூறையாடி வருவது கடும் கண்டனத்துக்கு உரியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தாலும், இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் விலை குறையவில்லை. மத்திய அரசின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளால் மீள முடியாத துயரப்படுகுழியில் சாதாரண மக்கள் தள்ளப்பட்டு வருவது ஏற்கத்தக்கது அல்ல. மத்திய அரசு உடனடியாக சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமையல் எரிவாயு விலை கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் மூன்று முறை விலையை உயர்த்தி அதன் காயம் ஆறாத நிலையில் தற்போது 4-வது முறையாக மேலும் ரூ.25 விலையை உயர்த்தி சிலிண்டர் விலை ரூ.835 ஆக உயர்ந்துள்ளது. சமையல் கியாஸ் விலை உயர்வு யாரையும் பாதிக்காது என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறுவது வியப்பாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து, அதன் விளைவாக அத்தியாவசிய பண்டங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் பன்மடங்கு உயர்ந்து வருகின்றன. உயர்த்தப்பட்ட விலை உயர்வை உடன் திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

வாங்கி பயன்படுத்த முடியாத நிலை

இதுகுறித்து சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கவுரி வெங்கடேசன் கூறியதாவது:-

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தற்போது ரூ.835-ல் போய் நிற்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் இப்படியே சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி கொண்டே போவதால் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழைகள் சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இதில் தலையிட்டு பேசி சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். எப்போது பார்த்தாலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு தெரிந்த வார்த்தை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டது என்று ஒரு காரணத்தை கூறுகின்றனர். அப்படி என்ன கச்சா எண்ணெய் தாறுமாறாகவா? உயர்ந்து வருகிறது. இதற்கு எண்ணெய் நிறுவனங்கள் பதில் கூற வேண்டும்.

வாழ்க்கை போராட்டம்

ரெட்டேரியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பி.யமுனா பாலமுரளி கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கு முடிந்து தளர்வுகளுக்கு பிறகு வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்துவதே போராட்டமாக இருந்து வரும் நிலையில் தற்போது கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே போகிறது. பள்ளி கட்டணம் கட்டுவதா? குடும்பத்தை ஓட்டுவதா? என்றே தெரியவில்லை. பசி என்பது அனைவருக்கும் பொதுவானது தான், பசியை போக்க தினசரி 3 வேளை சமையல் செய்து ஆக வேண்டும். இதனால் கியாஸ் சிலிண்டர் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. ரேசன் கடைகளில் மானியமாக உணவு பொருட்கள் வழங்குவதற்கு பதிலாக சமையல் கியாஸ் சிலிண்டரை மாநில அரசு இணைந்து வழங்க நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரேசன் கடைகளில் மண்எண்ணெய்

அம்பத்தூரை சேர்ந்த எஸ்.வளர்மதி சீனிவாசன் கூறியதாவது:-

சிலிண்டர் விலை உயர்வு குடும்ப பட்ஜெட்டை மிகவும் பாதித்து வருகிறது. இப்படியே சென்றால் ஏப்ரல் கடைசி வாரத்தில் வரலாறு காணாத அளவில் ஆயிரம் ரூபாயை தொட்டுவிடும். சிலிண்டர் இருப்பதால் ரேஷன் கடைகளில் மண்எண்ணெய் தர மறுக்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் பழைய முறைப்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மாதம் 20 லிட்டர் மண்எண்ணெய் தர வேண்டும். அதை வைத்து சமையல் செய்து கொள்கிறோம். விலையை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்