பேட்டி
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வாக்குப்பதிவுக்கான அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. கடைசி 3 நாட்களில்தான் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா அதிகளவில் நடைபெறும் என்பதை கருத்தில்கொண்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட தேர்தல் பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தி உள்ளோம்.அதன்படி, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பணப்பட்டுவாடா சம்பந்தமாக வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த
அதிகளவிலான பணம் 3-ந் தேதி (நேற்று முன்தினம்) பறிமுதல் செய்யப்பட்டது.
தேர்தல் ரத்தாகுமா?
அதிகளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்பதை இந்திய தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது, இந்த பணம் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காகத்தான் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா, குறிப்பிட்ட அந்த தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்ததா, பணம் பதுக்கி வைத்திருந்த நபர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவரா அல்லது அரசியல் கட்சியுடன் தொடர்பு உள்ளவரா என்பது போன்ற அனைத்து விவரங்களையும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஒவ்வொரு நாளும்
அறிக்கையாக அளித்து வருகிறோம். பணம் பறிமுதல், பட்டுவாடா குறித்து அறிக்கை அளிப்பது மட்டுமே எங்களது பணி. அதன் அடிப்படையில் குறிப்பிட்ட தொகுதியில் தேர்தலை ரத்து செய்வது குறித்து இந்திய தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்.
பட்டுவாடா குறித்து புகார்
அவ்வாறு ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பாக தேர்தல் பார்வையாளர்களிடமும் இந்திய தேர்தல் ஆணையம் கருத்து கேட்கும். அதன்பின்பு ஆணையம் உரிய முடிவு எடுக்கும். பணப்பட்டுவாடா குறித்து
1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் புகார் செய்யலாம். அவ்வாறு பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குப்பதிவு தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில கட்டுப்பாட்டு அறை செயல்படத் தொடங்கியுள்ளது.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
ஒரு தொகுதிக்கு 2 பேர் வீதம் 18 தேர்தல் அதிகாரிகள் இந்த பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்ல வாக்காளர்களுக்கு அனுமதி இல்லை.தமிழகத்தில் 10 ஆயிரத்து 727 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 551 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை ஆகும். பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.