சென்னை,
ஈரான் துறைமுகம் கார்க் நகரில் இருந்து சென்னைக்கு பனாமா நாட்டைச் சேர்ந்த ரைஸ் பிகிலிட்டி என்ற எண்ணெய் கப்பல் புறப்பட்டு வந்தது. கச்சா எண்ணெய் ஏற்றி வந்த அந்த கப்பலில் 36 ஊழியர்கள் இருந்தனர்.
சென்னை துறைமுகம் வந்தடைந்ததும், அந்த கப்பலில் பணிபுரியும் ஊழியர்கள் குறித்த தகவல்களை அறிய இந்திய குடியுரிமை அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு சென்றனர்.
இதற்கிடையே 4 ஊழியர்களை கப்பல் நிர்வாகம் சட்டவிரோதமாக ஆவணங்கள் இன்றி பணியமர்த்தி இருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து 10 மாடிகள் கொண்ட அந்த எண்ணெய் கப்பல் முழுவதும் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது என்ஜின் அறையில் பதுங்கி இருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் 4 பேரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. அவர்களிடம் பாஸ்போர்ட்டுகள் இருந்தன. ஆனால் கப்பலில் பணிபுரியும் ஊழியருக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. அதாவது, கப்பல் ஊழியர்கள் பட்டியலில் அவர்கள் பெயர் இடம்பெறவில்லை.
எனவே 4 பேரையும் என்ஜின் அறையில் மறைத்து வைத்து இருந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து கேரளாவைச் சேர்ந்த பியாஸ், கடலூரைச் சேர்ந்த பிரகாஷ், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த விஷால் ஆகிய 4 பேரையும் அதிகாரிகள் மீட்டனர்.
இது தொடர்பாக புனேயைச் சேர்ந்த கப்பல் கேப்டன் பவன்குமாரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர், மீட்கப்பட்ட 4 பேரும் பயிற்சி ஊழியர்கள் என்றும், அதனால் பட்டியலில் அவர்கள் பெயர் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து மீட்கப்பட்ட 4 பேரிடமும் வாக்குமூலம் பெறப்பட்ட பிறகு நேற்று காலை ஊழியர்கள் 4 பேர் மற்றும் கப்பல் கேப்டன் பவன் குமார் ஆகியோரை சென்னை துறைமுக போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக கப்பல் கேப்டன் பவன் குமாரை போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட ஊழியர்களில் ஒருவரான பியாஸ் கூறியதாவது:-
கடந்த மாதம் ஈரானின் கார்க் துறைமுகத்தில் இருந்து எண்ணெய் கப்பல் சென்னைக்கு புறப்பட்டது. அதில் பயிற்சி ஊழியர்களாக சேர்க்கப்பட்ட எங்களுக்கு எண்ணெய் டேங்க்குகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட கடுமையான வேலைகள் வழங்கப்பட்டன.
நல்லபெயர் வாங்க வேண்டும் என்பதற்காக நாங்களும் கஷ்டப்பட்டு பணியாற்றினோம். இதற்கிடையில் ஊழியர்கள் பட்டியலில் எங்களது பெயர் இடம்பெறவில்லை என அறிந்துகொண்டோம். அது, கடல் பயணம் மற்றும் குடியுரிமை விதிகளுக்கு எதிரானது.
ஆனால், அதில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. அதே நேரத்தில் குடியுரிமை அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது அவர்களின் கண்ணில் படாமல் ஒளிந்து கொள்ள வேண்டும் என கேப்டன் தெரிவித்தார்.
அது எங்களுக்கு பயத்தை ஏற்படுத்தியது. சட்டவிரோதமாக பயணம் செய்பவர்கள் வெளிநாட்டு துறைமுகத்தில் பிடிபட்டால் அவர்களுக்கு கப்பல் நிர்வாகம் இழப்பீடு தரத்தேவை இல்லை. ஏனெனில் உரிய ஆவணங்கள் இன்றி அவர்கள் பயணம் செய்ததாக கருதப்படுவார்கள்.
எனவே, அதில் இருந்து தப்பிக்க திடீரென நாங்கள் முடிவெடுத்தோம். கப்பல் இந்திய எல்லையான லட்சத்தீவு அருகே வந்தபோது கேரளாவில் உள்ள எனது உறவினரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு இதுபற்றி தகவல் தெரிவித்தேன்.
சென்னை வந்ததும் எங்களை மீட்க உதவும்படி குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டேன். அதன்படி அவர் அளித்த தகவலின் பேரில் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் நாங்கள் மீட்கப்பட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோன்று உரிய ஆவணங்கள் இன்றி கப்பலில் ஊழியர்களை பணியில் அமர்த்துவது மிகப்பெரிய குற்றமாக கருதப்படும். இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் கூறினர்.
மேலும் பிடிபட்ட 4 இந்திய ஊழியர்களும் எந்தவித தவறும் செய்யவில்லை. அவர்களிடம் பாஸ்போர்ட்டுகள் உள்ளன. இவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் சம்பளம் வழங்காமல் சென்னை துறைமுகத்தை விட்டு அந்த எண்ணெய் கப்பல் செல்ல முடியாது. அதற்கான அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.