சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி தொடங்க இருக்கிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்துடன் இணைந்து சென்னை மாநகராட்சி இந்த பணியில் ஈடுபடுகிறது. தகுதியான ரேஷன் அட்டைதாரர்களுக்கு இதற்கான டோக்கன் வினியோகிக்கும் பணி 15 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. 503 இடங்களில் உள்ள 703 கடைகளில் சிறப்பு முகாம் அமைக்கப்பட இருக்கிறது. அதாவது 500 கார்டுகளுக்கு ஒரு முகாம் என்ற அடிப்படையில் செயல்பட உள்ளது. 1,800-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விண்ணப்ப படிவங்களை அவரவருக்கு ஒதுக்கப்பட்ட முகாம்களுக்கு குறிப்பிட்ட நாட்கள் மற்றும் நேரங்களில் சென்று சமர்பிக்கலாம். ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, மின்கட்டண அட்டை மற்றும் வங்கி கணக்கு ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
நேற்று 2-வது நாளாக ரேஷன் கடைகளில் படிவங்கள் வழங்கப்பட்டன. 23-ந்தேதிக்குள் அதிகபட்சமாக 90 சதவீதத்துக்கு மேல் படிவங்களை வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் வழங்குவதற்கு கால அவகாசம் நிர்ணயிக்கப்படவில்லை. சென்னையை பொருத்தவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மகளிர் உரிமை தொகை பெற தகுதி உடையவர்கள் இருப்பதால் கூட்ட நெரிசலை தடுக்க மத்தியம், வடக்கு, தெற்கு என 3 மண்டலங்களாக பிரித்து விண்ணப்பம் வழங்கும் பணி நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.