கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராமச்சந்திரத்தை சேர்ந்தவர் தமிழரசன் (30 வயது). டிராக்டர் டிரைவர். இவரது மனைவி சத்யவாணி (23 வயது). இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தமிழரசன் தனது தந்தை ராஜன் (55 வயது), தாய் லட்சுமி (53 வயது) ஆகியோருடன் சேர்ந்து கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். மரம் அறுக்கும் தொழிலாளியான ராஜனுக்கும், அவரது மருமகள் சத்யவாணிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கணவர் இல்லாத நேரத்தில் சத்யவாணி மாமனாருடன் உல்லாசமாக இருந்து வந்தார்.
கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சத்யவாணிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 2 மாதத்தில் சத்யவாணி மீண்டும் கர்ப்பமானார். இது தமிழரசனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே தனது மனைவிக்கும், தந்தைக்கும் இடையே பழக்கம் இருப்பதாக அரசல்புரசலாக அறிந்த தமிழரசன் மனைவியிடம் தகராறு செய்தார். ஆனாலும் அவர்கள் தொடர்பை தொடர்ந்து வந்தனர். இதனிடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சத்யவாணிக்கு 2-வது பெண் குழந்தை பிறந்தது.
நேற்று முன்தினம் தமிழரசன் வழக்கம் போல வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். அப்போது 5 மாத பெண் குழந்தையை வீட்டில் காணவில்லை. இதை பார்த்த அவர் மனைவியிடம் கேட்டார். அதற்கு அவர் குழந்தையை காணவில்லை என்று கூறினார். இதையடுத்து அவர்கள் குழந்தையை தேடி பார்த்தனர். அப்போது வீட்டின் அருகில் சேட்டு என்பவரின் கிணற்றில் குழந்தையின் உடல் கிடந்தது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையின் உடலை மீட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வேப்பனப்பள்ளி போலீசார் குழந்தையின் தாய் சத்யவாணியிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. நேற்று முன்தினம் சத்யவாணியை மாமனார் ராஜன் வழக்கம் போல உல்லாசமாக இருக்க அழைத்தார். அந்த நேரம் 5 மாத பெண் குழந்தை அழுது கொண்டிருந்தது. இதையடுத்து தாய் சத்யவாணி குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டு கழிவறைக்கு சென்றார். அந்த நேரத்தில் ஆத்திரத்தில் இருந்த ராஜன் குழந்தையின் மூச்சை அழுத்தி கொலை செய்து, குழந்தையின் உடலை அருகில் உள்ள கிணற்றில் போட்டுவிட்டு வந்துள்ளார்.
இதுகுறித்து தெரிந்தும் சத்யவாணி யாரிடமும் கூறாமல் கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து சத்யவாணி, அவரது மாமனார் ராஜன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.