வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகளூரில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சார்பில், சமுதாய நலப்பணிகள் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கரூர் காகித ஆலை சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சுகாதாரத்துறை, திருக்கோவில்கள் மற்றும் மசூதிகள் கட்டிட மேம்பாடு, பள்ளிகளுக்கு உபகரணங்கள், மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் என பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ,60 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டம் முண்டிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தில் ஆண்டுக்கு 2 லட்சம் டன் காகித அட்டைகள் தயாரிக்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள காகித ஆலையில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் காகிதங்கள் தயாரிக்கப்படுகின்றது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் திருச்சி முண்டிப்பட்டியில் ரூ.1,100 கோடி மதிப்பில் மரக்கூழ் தயாரிக்கும் ஆலை அமைக்க அடிக்கல் நாட்டி, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலை வாய்ப்பு
தொடர்ந்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், தொடர்ந்து லாபத்தில் இயக்கப்பட்டு, பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், பல லட்சம் தொழிலாளர்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரக்கூடியது இந்த காகித ஆலை நிறுவனம். தமிழ்நாடு காகிதஆலை நிறுவனம் மென்மேலும் வளர்ந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
ஆய்வுக்கூட்டம்
முன்னதாக கரூர் மாவட்ட தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து நிறுவனத்தின் உயர் அலுவலர்களுடன் அமைச்சர்கள் ஆய்வு கூட்டம் நடத்தினர். அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காக ஆறு இருக்கைகள் கொண்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான மின்கல வாகனத்தையும், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சையளிக்கும் வகையில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியும், சென்னை அடையார் புற்று நோய் மையத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், வேலாயுதம்பாளையத்தில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் கட்டுமானப்பணிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியும், தொழிலாளர் ஈட்டுருதி மருத்துவமனைக்கு மருத்துவ சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கிக்கொள்ள ரூ.2 லட்சம் நிதியுதவியும், மூலிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை முன்மாதிரி பள்ளியாக தரம் உயர்த்த ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் உபகரணங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், புகளூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பயன்பாட்டிற்காக மதிய உணவு சமையல் கூடம் மற்றும் உணவு அருந்தும் கட்டிடம் கட்ட ரூ.5 லட்சம் நிதியுதவியும், ஏழைகுடும்பத்தைச்சேர்ந்த 4 நபர்களுக்கு ரூ.95 ஆயிரம் மதிப்பில் மருத்துவ நிதியுதவியும் என பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.60 லட்சத்து 31 ஆயிரத்து 285 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் எம்.சி.சம்பத், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் வழங்கினார்கள். மேலும் கரூர் காகித ஆலையின் மேம்பாட்டு பணிக்காக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய பேட்டரி காரினை அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் அன்பழகனிடம் வழங்கினர்.
கலந்து கொண்டவர்கள்
இதில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தலைவர் முருகானந்தம், மேலாண்மை இயக்குனர் சிவசண்முகராஜா, நிறுவனத்தின் காவல்துறைத்தலைவரும், முதன்மை விழிப்புணர்வு அதிகாரியுமான நஜ்மல் ஹோதா, நிறுவன செயல் இயக்குனர் கிருஷ்ணன், முதன்மை பொது மேலாளர்கள் பட்டாபிராமன் (மனிதவளம்), பாலசுப்பிரமணியன் (வணிகம் மற்றும் மின்னியல்), தங்கராஜூ (உற்பத்தி), முதன்மை தகவல் அலுவலர் மனோகரன், பொது மேலாளர்கள், துணை பொது மேலாளர்கள், உதவி பொது மேலாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.