செய்திகள்

கோவையில் தொடரும் தாக்குதல் சம்பவங்கள்: கடைக்குள் புகுந்து ஆர்.எஸ்.எஸ். பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கோவை சுந்தராபுரத்தில் கடைக்குள் புகுந்து ஆர்.எஸ்.எஸ். பிரமுகரை மர்மநபர்கள் சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டினர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தினத்தந்தி

போத்தனூர்,

கோவையில் இந்து அமைப்புக்கள், முஸ்லிம்களிடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடைபெற்று வந்ததால் மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் மாலை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர் இக்பால் தனது கடையில் இருந்தபோது ஆயுதங்களுடன் புகுந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது.

இதில் படுகாயம் அடைந்த இக்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் கோவை மாச்சம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ் (28). ஆர்.எஸ்.எஸ். பிரமுகர். இவர் சுந்தராபுரம் மதுக்கரை சாலையில் மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவர் வழக்கம்போல் நேற்று மாலை கடையில் இருந்தபோது திடீரென கடைக்கு புகுந்த 4 மர்ம நபர்கள் சூரிய பிரகாஷை இரும்பு கம்பி கொண்டு தாக்கி, அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் சூர்யபிரகாஷ் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கே.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த இந்து அமைப்பினர் சுந்தராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படடது. அப்போது சூர்யபிரகாஷ் மீது தாக்குதல் நடத்திய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், சம்பவத்தை கண்டித்தும் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் மதுக்கரை, சுந்தராபுரம், குனியமுத்தூர், ஆத்துப்பாலம் உள்ளிட்ட பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சூர்ய பிரகாஷ் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுக்கரை மற்றும் சுந்தராபுரம் பகுதிகளில் சாலை தடுப்பான்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது