செய்திகள்

பள்ளி மாணவியை சந்தித்து பேசியதால் முன்விரோதம், கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர் கைது

கோவையில் பள்ளி மாணவியை சந்தித்து பேசியதால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை,

கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் கண்ணன், கூலி தொழிலாளி. இவருடைய மகன் முரளிதரன் (வயது 20). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த பாலாஜி (24) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் முரளிதரன் தனது நண்பர்களான நவீன்பிரபு, பிரகாஷ் ஆகியோருடன் கெம்பட்டிகாலனியில் உள்ள தர்மராஜா கோவில் அருகே நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் பாலாஜி வந்தார்.

உடனே முரளிதரன் உள்பட 3 பேரும், பாலாஜியை வழிமறித்து வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. இந்த வாக்குவாதம் முற்றியதால் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலாஜி தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து முரளிதரன் நெஞ்சில் பலமாக குத்தினார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி சாய்ந்தார். உடன் இருந்த நவீன்பிரபு, பிரகாஷ் ஆகியோரையும் அவர் குத்திவிடுவதாக மிரட்டியதால் பயந்துபோன அவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். பாலாஜியும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

இது குறித்து தகவலறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த முரளிதரனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பெரியகடை வீதி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அந்த பகுதியில் பதுங்கி இருந்த பாலாஜியை போலீசார் கைது செய்து, போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

விசாரணையில், பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவரிடம் பேசியதால் ஏற்பட்ட தகராறில்தான் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. மேலும் இந்த கொலை தொடர்பாக பாலாஜி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

கோவையில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவியும், முரளிதரனின் நண்பரும் காதலித்து வந்துள்ளனர். அந்த மாணவியின் பிறந்தநாளை முன்னிட்டு முரளிதரனும், அவருடைய நண்பரும், அந்த மாணவியின் வீட்டின் அருகே சென்று அவரிடம் பேசிக்கொண்டு இருந்தனர்.

அதை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பார்த்ததும், அவர்கள் 2 பேரையும் பிடித்து, எங்கள் பகுதியை சேர்ந்த பெண்ணிடம் எப்படி பேசலாம் என்று கேட்டு தகராறு செய்து உள்ளனர். பாலாஜி, கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் என்றாலும், அவர் சம்பவம் நடந்த இடத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார்.

உடனே அவரும் அங்கு வந்து, இந்த பகுதிக்கு ஏன் வந்தீர்கள்? என்று முரளிதரனை தாக்கியதாக தெரிகிறது. இதனால் முரளிதரனுக்கும், பாலாஜிக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. கடந்த 29-ந் தேதி பாலாஜி தனியாக சென்றபோது முரளிதரன் மற்றும் சிலர் அவரை வழிமறித்து தாக்கி உள்ளனர்.

இதனால் பாலாஜி எப்போதும் கத்தியை மறைத்து வைத்தபடி சென்று உள்ளார். நேற்று முன்தினம் இரவில் வீட்டிற்கு வந்தபோது, பாலாஜியை மறித்து முரளிதரன் மற்றும் அவருடைய நண்பர்கள் தாக்கி உள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த பாலாஜி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முரளிதரனை குத்தி கொன்றதாக வாக்கு மூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் போலீசார் பாலாஜியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு