சென்னை,
சென்னை மாநகரினை சிங்காரச் சென்னையாக திகழச் செய்திடும் வகையில் சாலைகள், தெருக்கள், மக்கள் குடியிருப்புப் பகுதிகள், பாலங்கள், பேருந்து நிறுத்தங்கள், மயானபூமிகள் உள்ளிட்ட பொது இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகரம் வேகமாக நகரமயமாக்கப்பட்டு வரும் நிலையில், வீட்டு குப்பைகள் மற்றும் வணிக நிறுவன குப்பைகளுக்கு அப்பாற்பட்டு, புதிய வளர்ச்சித் திட்டங்கள், கட்டிட இடிப்புகள் மற்றும் மறுகட்டுமானம், பழுதுபார்க்கும் பணிகள் காரணமாக கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் பெருமளவில் உருவாகி வருகின்றன.
இந்த கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் பொது சாலைகள், தெருக்கள், நடைபாதைகள், பாதசாரி நடைபாதைகள், மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள், ஆறுகள், ஏரிகள், காலி நிலங்கள் மற்றும் திறந்த வெளிகள் போன்ற அனுமதியற்ற இடங்களில் கொட்டப்படுவதன் காரணமாக, நீர்நிலைகள் மற்றும் ஆறுகள் கடுமையாக மாசுபடுவதும், கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு வெள்ள அபாயம் அதிகரிப்பதும், தூசி மற்றும் கழிவு துகள்களால் காற்று மாசுபடுவதும், பொது சுகாதாரம் பாதிக்கப்படுவதும், நகரினை அழகுபடுத்தும் முயற்சிகள் பாதிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு கண்கூடாகத் தோன்றும் அசுத்தமான சூழல் உருவாகும் நிலை ஏற்படுகிறது.
இத்தகைய கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை கொட்டுவதை அப்புறப்படுத்தவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்க்கும் நோக்கிலும், பெருநகர சென்னை மாநகராட்சி 2025 ஜனவரி மாதத்தில் கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை அகற்றுவதற்காக சிறப்பு வாகனங்களை அறிமுகப்படுத்தியது. இவ்வாகனங்கள் மூலம் கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் கொட்டப்படும் இடங்களை கண்காணித்தல், அவற்றை அகற்றுதல் மற்றும் முறையான செயலாக்க நிலையங்களுக்கு அனுப்பி மறுசுழற்சி பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டம் கடந்த ஜனவரி 2025 முதல் செயல்படுத்தப்பட்டு 29.01.2026 வரை பெருநகர சென்னை மாநகராட்சி வடக்கு வட்டாரத்தில் (மண்டலம் 1 முதல் 5 வரை) 1.16 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகளும், மத்திய வட்டாரத்தில் (மண்டலம் 6 முதல் 10 வரை) 1.65 லட்சம் மெட்ரிக்டன் கழிவுகளும் மற்றும் தெற்கு வட்டாரத்தில் (மண்டலம் 11 முதல் 15 வரை) 1.20 லட்சம் மெட்ரிக்டன் கழிவுகள் என மொத்தம் 4 லட்சம் மெட்ரிக் டன் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயலாக்க மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இது நீர்நிலைகள் பாதுகாப்பு, காற்று மாசுபாடு குறைப்பு மற்றும் நகர சுத்தம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலம் வாரியாக கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றிய விவரம்:-
1. திருவொற்றியூர் 17,769 (மெட்ரிக் டன்)
2. மணலி 15,400
3. மாதவரம் 23,873
4. தண்டையார்பேட்டை 30,946
5. இராயபுரம் 27,862
6. திரு.வி.க.நகர் 24,988
7. அம்பத்தூர் 24,748
8. அண்ணாநகர் 35,953
9. தேனாம்பேட்டை 41,455
10. கோடம்பாக்கம் 37,500
11. வளசரவாக்கம் 18,504
12. ஆலந்தூர் 21,510
13. அடையாறு 39,967
14. பெருங்குடி 22,507
15. சோழிங்கநல்லூர் 17,257
மொத்தம் 4,00,239