தலைப்புச் செய்திகள்

ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு; பிரான்ஸ் ஜனாதிபதி அடுத்த வாரம் இந்தியா வருகை

பிரான்சில் நடந்த ஏ.ஐ. செயல் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கடந்த ஆண்டு அந்நாட்டுக்கு சென்றார்.

புதுடெல்லி,

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், மேக்ரான் மேற்கொள்ளும் இந்த பயணத்தில், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசுகிறார்.

அப்போது அவர், மண்டல மற்றும் உலகளாவிய விசயங்களில் பரஸ்பர நலன், இந்தோ-பசிபிக்கில் ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இரு தலைவர்களும் பார்வைகளை பரிமாறி கொள்ள உள்ளனர் என அந்த தகவல் தெரிவிக்கின்றது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில், பிரான்சின் பாரீஸ் நகரில் நடந்த ஏ.ஐ. செயல் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அந்நாட்டுக்கு சென்றார். இந்நிலையில், இந்தியாவில் நடப்பு ஆண்டு பிப்ரவரியில், ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு நடைபெறுகிறது.

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த உச்சி மாநாடானது, உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் நடைபெற கூடிய முதல் உச்சி மாநாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.