மும்பை,
பாராமதியில் கடந்த ஜனவரி 28-ந்தேதி நடந்த விமான விபத்தில் அஜித்பவார் மரணம் அடைந்தார். இதற்காக 3 நாட்கள் அரசுமுறை துக்கம் கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக, மாநில தேர்தல் ஆணையம் மாவட்ட பஞ்சாயத்து, பஞ்சாயத்து சமிதிகளுக்கான தேர்தல் அட்டவணையை மாற்றி அமைத்தது. அதன்படி தேர்தல் தேதி வருகிற 5-ந்தேதிக்கு பதிலாக 7-ந்தேதி மாற்றப்பட்டது. வாக்கு எண்ணிக்கை 9-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் பிரசாரத்துக்கான இறுதி நாள் 5-ந்தேதி ஆகும்.
மராட்டியத்தின் முக்கிய தலைவர் ஒருவரின் மறைவு, மாநில அரசியலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மாநிலத்தில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் தான் பங்கேற்கப்போவதில்லை என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
இந்த மாவட்ட பஞ்சாயத்து தேர்தலுக்காக முதல்-மந்திரி பட்னாவிஸ் 7 நாட்களில் சுமார் 22 பொதுக்கூட்டங்களில் உரையாற்ற திட்டமிட்டிருந்தார். ஆனால், அனைத்து கூட்டங்களையும் அவர் ரத்து செய்துள்ளார். இருப்பினும் கட்சியின் உள்ளூர் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் பணிகளையும் பிரசாரத்தையும் தடையின்றி முன்னெடுக்குமாறு தேவேந்திர பட்னாவிஸ் அறிவுறுத்தியுள்ளார்.