புதுடெல்லி,
மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2027-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த முழுமையான தகவல்கள் ஏற்கனவே கடந்த மாதம் 12-ந் தேதி வெளியிடப்பட்டது. இருப்பினும், சாதி வாரியான கணக்கெடுப்பு குறித்து சிலர் திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயன்று வருகின்றனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு வழக்கம் போல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல் கட்டத்தில் வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டு வசதி குறித்த கணக்கெடுப்பு நடைபெறும். இரண்டாம் கட்டத்தில் தான் சாதி வாரியான கணக்கெடுப்பு உள்ளிட்ட மக்கள் தொகை கணக்கீடு நடைபெறும்.இந்த இரண்டாம் கட்டப்பணிகள் அடுத்த ஆண்டு (2027) பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் தொடங்கும்.
அதே சமயம், ஜம்மு காஷ்மீர், இமாசலபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பனிப்பொழிவு அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும், முன்கூட்டியே அதாவது வருகிற செப்டம்பர் மாதமே இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.முதல் கட்ட கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் 1-ந் தேதி தொடங்க உள்ளது.
இதில் கேட்கப்பட வேண்டிய 33 கேள்விகள் குறித்த அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஜனவரி 22-ந் தேதி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.