தலைப்புச் செய்திகள்

பொருளாதார தொலை நோக்கு பார்வையில்லாத பட்ஜெட் - ப.சிதம்பரம் விமர்சனம்

அரசும், நிதி அமைச்சரும் 2025-26-க்கான பொருளாதார ஆய்வறிக்கையை படித்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

2026-27ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் மருந்து உற்பத்தி, டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி உட்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டை எதிர்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்தவகையில்,

மத்திய அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் குறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

நிதியமைச்சரின் பட்ஜெட் உரையை ஒவ்வொரு பட்ஜெட் வர்ணனையாளரும், எழுத்தாளரும், பொருளாதார துறையின் ஒவ்வொரு மாணவரும் கேட்டு திகைத்து போயிருக்க வேண்டும். ஒரு பட்ஜெட் என்பது ஆண்டு வருமானம் மற்றும் செலவினங்களின் அறிக்கை மட்டுமல்ல என்பதை ஒப்புக்கொள்கிறேன். இந்த சூழ்நிலையில், சில நாட்களுக்கு முன் வெளியான பொருளாதார ஆய்வில் கோடிட்டு காட்டப்பட்ட முக்கிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பட்ஜெட் உரை இருந்திருக்க வேண்டும்.

அரசும், நிதி அமைச்சரும் 2025-26-க்கான பொருளாதார ஆய்வறிக்கையை படித்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் அதைப் படித்திருந்தால், அதை முழுமையாகத் நிராகரித்துவிட்டு, வழக்கமாக மக்களுக்கு புரியாத வார்த்தைகளை, குறிப்பாக சுருக்கப்பெயர்களை வீசியெறியும் தங்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கிற்குத் திரும்பியதாக தெரிகிறது.

பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் பல அறிவுசார் வல்லுநர்களால் அடையாளம் காணப்பட்ட குறைந்தது 10 சவால்களை என்னால் எண்ணிச் சொல்ல முடியும். அமெரிக்கா விதித்துள்ள வரிகள் உற்பத்தியாளர்களுக்கு, குறிப்பாக ஏற்றுமதியாளர்களுக்கு அழுத்தத்தை உருவாக்கியுள்ளன. வளர்ந்து வரும் வர்த்தகப் பற்றாக்குறை, குறிப்பாக சீனாவுடனான வர்த்தகம், இந்தியாவிற்குள் வரும் அந்நிய நேரடி முதலீட்டின் நிச்சயமற்ற போக்கு மற்றும் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து வெளியேறி வரும் அந்நிய நிறுவன முதலீடு இவை எதையுமே நிதி அமைச்சரின் உரை கையாளவில்லை.

எனவே, கைதட்டல்கள் கடமைக்காக இருந்ததிலும், பெரும்பாலான பார்வையாளர்கள் விரைவிலேயே அதிலிருந்து கவனத்தைத் திருப்பியதிலும் ஆச்சரியமில்லை. சன்சத் டிவி ஒளிபரப்பு கூட சில முறை துண்டிக்கப்பட்டது. ஒரு கணக்காளரின் தரப்பிலிருந்து பார்த்தால் கூட, 2025-26 நிதி நிர்வாகத்தைப் பற்றிய மிக மோசமான அறிக்கையாகவே இது இருந்தது.

பெரிய அளவில் பேசப்பட்ட ஜல் ஜீவன் திட்டத்திற்கான செலவினம் ரூ 67,000 கோடியில் இருந்து வெறும் ரூ.17,000 கோடியாக பெரியளவில் குறைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1, 2026 அன்று நடைமுறைக்கு வரவிருக்கும் 2026 வருமான வரி சட்டம் நிறைவேற்றப்பட்ட பல மாதங்களுக்கு பிறகு, நிதிமந்திரி நில விகிதங்களில் மாற்றங்கள் செய்துள்ளார். இது பொருளாதார தொலைநோக்கு பார்வை இல்லாத ஒரு பட்ஜெட் என்பதே எங்களது கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.

சாமானிய மக்களை வறுமைக்குள் தள்ளும் பட்ஜெட் - பினராயி விஜயன் தாக்கு

ஜனவரியில் ரூ.1.93 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வரி வசூல்

கள்ளக்காதலனின் மனைவி, குழந்தை எரித்துக்கொலை - பெண் வெறிச்செயல்

மத்திய பட்ஜெட்; கோவாவை மத்திய அரசு முற்றிலும் மறந்து விட்டது: கெஜ்ரிவால் தாக்கு

சென்னை: கடலோர காவல் படை 50-வது நிறுவன தினம் விமரிசையாக கொண்டாட்டம்