பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகா ஹுனசேகரே கிராமத்தை சேர்ந்தவர் இந்திரா (வயது 24). இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஹாசன் தாலுகா எச்.மைலள்ளி கிராமத்தை சேர்ந்த சாமி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது, இந்திராவின் பெற்றோர் 60 கிராம் தங்கம் மற்றும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரொக்கத்தை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, தம்பதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால், தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், சாமியின் தாய் சங்கரம்மா மற்றும் சகோதரி புட்டி ஆகிய 2 பேரும் சேர்ந்து இந்திராவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால், இந்திரா அடிக்கடி அவரது தாய் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.
இதையடுத்து இந்திராவின் பெற்றோர் அவரை சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே, சாமி பேக்கரி கடை நடத்தி வந்தார். அதில், நஷ்டம் ஏற்பட்டதால் பேக்கரியை மூடிவிட்டு அவர் கூலிவேலைக்கு செல்ல தொடங்கினார். ஆனால், கூலிவேலைக்கு செல்ல மனம் இல்லாமல் மீண்டும் தொழில் தொடங்க வேண்டும் என கூறி இந்திராவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சாமி கொடுமைப்படுத்தியுள்ளார்.
மேலும், இந்திராவின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாக கூறி சாமி அவரை துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த இந்திரா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப்பார்த்த, சாமி மற்றும் அவரது குடும்பத்தினர், அவரை ஹாசனில் உள்ள கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனாலும், இந்திரா சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த இந்திராவின் பெற்றோர், தங்களது மகளின் சாவுக்கு அவரது கணவர் சாமி, மாமியார் சங்கரம்மா, நாத்தனார் புட்டி ஆகியோர் தான் காரணம் என துட்டா போலீசில் புகார் அளித்தனர்.
மேலும், இந்திரா வரதட்சணை கொடுமை காரணமாக தான் தற்கொலை செய்து கொண்டார் என்றும் பெற்றோர் குற்றம் சாட்டினர். அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் துட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.