செய்திகள்

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் படைவீரர் கொடிநாள் நிதி வசூல் கலெக்டர்கள் தொடங்கி வைத்தனர்

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் படைவீரர் கொடிநாள் நிதி வசூலினை, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உண்டியலில் நிதி அளித்து தொடங்கி வைத்தனர்.

தினத்தந்தி

பெரம்பலூர்,

நமது தாயகத்தைக் காக்கும் பணியில் முப்படைகளிலும் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் மற்றும் படைப்பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள முன்னாள் படைவீரர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ந் தேதியன்று படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்படும் டிசம்பர் 7-ந் தேதியன்று அரசால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கொடிநாள் நிதி வசூல் தொடங்கப்படுகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் வசூலிக்கப்படும் படைவீரர் கொடிநாள் வசூல் உண்டியலில் கலெக்டர் சாந்தா நிதி அளித்து, கொடிநாள் வசூலினை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், கடந்த 2018-ம் ஆண்டிற்கான கொடிநாள் நிதி வசூலாக ரூ.11 லட்சத்து 59 ஆயிரத்து 300 இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நமது மாவட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்களின் ஒத்துழைப்போடு நிர்ணயித்த இலக்கைவிட கூடுதலாக ரூ.14 லட்சத்து 50 ஆயிரமாக வசூலித்து சாதனை படைத்தோம். நடப்பாண்டில் 2019-க்கான அரசின் கொடிநாள் வசூல் நமது மாவட்டத்திற்கு இலக்காக ரூ.12 லட்சத்து 75 ஆயிரமாக உள்ளது. இந்த ஆண்டும் கடந்த ஆண்டை போல கொடிநாள் நிதி வசூலில் அனைத்து துறைகளின் ஒத்துழைப்புடன் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கைவிட கூடுதலாக வசூலித்து, சாதனை படைக்க வேண்டும் என்றார்.

அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன், மாவட்ட திட்ட அலுவலர் தெய்வநாயகி, முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் லெப். கமாண்டர் சங்கீதா (ஓய்வு), முன்னாள் படைவீரர் நல அலுவலக கண்காணிப்பாளர் கலையரசி காந்திமதி, நல அமைப்பாளர் சடையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அரியலூரில்...

இதே போல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடிநாள் வசூல் உண்டியலில் கலெக்டர் ரத்னா நிதி அளித்து, கொடிநாள் வசூலினை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 2018-ம் ஆண்டிற்கான கொடிநாள் நிதி வசூலாக ரூ.23 லட்சத்து 50 ஆயிரத்து 600 இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நமது மாவட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்களின் ஒத்துழைப்போடு நிர்ணயித்த இலக்கைவிட கூடுதலாக ரூ.31 லட்சத்து 94 ஆயிரத்து 500 ஆக வசூலித்து சாதனை படைத்தோம். தற்போது 2019-ம் ஆண்டுக்கான அரசின் கொடிநாள் வசூல் நமது மாவட்டத்திற்கு இலக்கு ரூ.25 லட்சத்து 85 ஆயிரம் ஆகும். இவ்வருடமும் கடந்த ஆண்டை போல கொடிநாள் நிதி வசூலில் அனைத்துத் துறைகளின் ஒத்துழைப்புடன் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கைவிட கூடுதலாக வசூலித்து, சாதனை படைக்க வேண்டும் என்றார்.

அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, கோட்டாட்சியர் (பொறுப்பு) பாலாஜி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதிலும் முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் லெப்.கமாண்டர் சங்கீதா (ஓய்வு), முன்னாள் படைவீரர் நல அலுவலக கண்காணிப்பாளர் கலையரசி காந்திமதி, நல அமைப்பாளர் சடையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்