வாஷிங்டன்,
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டினரையும், வெளியேற விரும்பும் உள்நாட்டினரையும் பத்திரமாக வெளியேற்ற தலீபான்கள் அனுதிமதிப்பார்கள் என சுமார் 100 நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளன.
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இதனால் அங்கு வசித்து வந்த வெளிநாட்டினரை அந்தந்த நாடுகள் வெளியேற்றி வருகின்றன. அத்துடன் தலீபான்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்களும் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று வருகின்றனர்.
இதனால் காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். அவர்களை அமெரிக்க ராணுவம் பத்திரமாக வெளியேற்றி வருகிறது. இந்த வெளியேற்றம் மற்றும் அமெரிக்க படைகள் வெளியேறுவதற்கு 31-ந் தேதி (இன்று) வரை காலக்கெடுவை தலீபான்கள் அறிவித்திருந்தனர். ஆனால் தலீபான்களின் இந்த கெடுவுக்குள் அனைவரையும் வெளியேற்ற முடியாத சூழல் நிலவுகிறது.
எனவே வெளிநாட்டினர் மற்றும் ஆப்கானிஸ்தானியர்கள் பத்திரமாக வெளியேற தலீபான்கள் அனுமதிப்பார்கள் என சுமார் 100 நாடுகள் கூறியுள்ளன. இது தொடர்பாக, ஆப்கானிஸ்தான் வெளியேற்றுதல் பயண உத்தரவாதத்துக்கான கூட்டறிக்கை என்ற பெயரில் கூட்டறிக்கை ஒன்றையும் இந்த நாடுகள் வெளியிட்டு உள்ளன.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எங்கள் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள், ஊழியர்கள், எங்களுடன் பணியாற்றிய ஆப்கானிஸ்தான் மக்கள் மற்றும் ஆபத்தில் உள்ளவர்கள் உள்ளிட்டோர் ஆப்கானிஸ்தானுக்கு வெளியே உள்ள இடங்களுக்கு சுதந்திரமாக பயணிக்க முடியும் என்பதை உறுதி செய்ய நாங்கள் அனைவரும் உறுதிபூண்டுள்ளோம்.
அனைத்து வெளிநாட்டினரும், எங்கள் நாட்டில் இருந்து பயண அங்கீகாரம் பெற்ற எந்த ஆப்கானிஸ்தான் குடிமகனும் பாதுகாப்பான மற்றும் ஒழுங்கான முறையில் நாட்டிற்கு வெளியே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தலீபான்களிடம் இருந்து எங்களுக்கு உத்தரவாதம் கிடைத்துள்ளது. அந்த உறுதிப்பாட்டில் நாங்கள் தலீபான்களை வைத்திருப்போம்.
ஆப்கானிஸ்தானியர்களுக்கு பயண ஆவணங்களை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம். மேலும் அவர்கள் அந்தந்த நாடுகளுக்கு பயணிக்கலாம் என்ற தெளிவான எதிர்பார்ப்பும், அர்ப்பணிப்பும் எங்களுக்கு தலீபான்களிடம் உள்ளது. இந்த புரிதலை உறுதிப்படுத்தும் தலீபான்களின் பொது அறிக்கைகளை நாங்கள் கவனிக்கிறோம் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்றனி பிளிங்கன் தனது டுவிட்டர் தளத்தில், இன்று, சுமார் 100 நாடுகள் தலீபான்கள் அளித்த உத்தரவாதத்தின் மீது ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு உள்ளன. அதன்படி, அனைத்து வெளிநாட்டினரும், அந்தந்த நாட்டில் இருந்து பயண அனுமதி பெற்ற எந்த ஆப்கானிய குடிமகனும் ஆப்கானிஸ்தானுக்கு வெளியே பாதுகாப்பாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.