சிட்னி,
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதையடுத்து, அந்நாட்டில் தலீபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். தலைநகர் காபுல் உள்பட பல முக்கிய நகரங்களை தலிபான்கள் அடுத்தடுத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதற்கிடையில் தலீபான்களின் ஆட்சிக்கு பயந்து அந்நாட்டு மக்கள் விமானத்தில் மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்து ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. வெளிநாடுகளில் வாழும் ஆப்கான் மக்கள் தாங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்றும் கூறி வருகின்றனர்.
தலிபான்கள் நேற்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், ஆப்கானிஸ்தானில் வாழும் வெளிநாட்டவர்கள் அச்சப்பட வேண்டாம் எனவும், வெளிநாட்டு தூதரகங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இருப்பினும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாட்டு அரசுகள் தங்கள் நாட்டு மக்களையும், தூதரக அதிகாரிகளையும் பத்திரமாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் ஆஸ்திரேலியா சார்பில் அனுப்பப்பட்ட மீட்பு விமானத்தின் மூலம் காபுல் விமான நிலையத்தில் இருந்து 26 ஆஸ்திரேலியர்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள ஆஸ்திரேலியர்களையும், ஆஸ்திரேலிய அரசுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் ஊழியர்களையும் பத்திரமாக மீட்பதற்காக ஆஸ்திரேலிய அரசு சார்பில் சுமார் 250 ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மீட்பு பணிகளில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ராணுவப் படைகள் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை காபுல் விமான நிலையத்தில் ஆப்கான் மக்கள் பலர் சூழ்ந்து கொண்டதால், அங்கிருந்து மீட்பு விமானங்கள் கிளம்ப முடியாத நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று நிலைமை சற்று சீரானதையடுத்து தற்போது மீண்டும் வெளிநாட்டு மக்களை தங்கள் சொந்த நாட்டுக்கு அழைத்துச் செல்லும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியா சார்பில் இன்று 26 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இனி வரும் நாட்களில் மேலும் சில விமானங்கள் அனுப்பப்பட்டு அதிக அளவில் தங்கள் நாட்டு மக்களை அங்கிருந்து அழைத்து வர முடிவு செய்துள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.