* வங்களாதேசத்தின் ஆளும் அவாமி லீக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், பொது நிர்வாகத்துறை முன்னாள் மந்திரியுமான சையத் அஷ்ராபுல் இஸ்லாம் (வயது 68), நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தாய்லாந்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது.
* பிரேசிலின் பாகியா மாகாணத்தில் உள்ள சியப்ரா என்கிற இடத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற ஒரு பஸ் மற்றும் 2 கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 23 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
* ரஷியாவின் மக்னிடோகோரஸ்க் நகரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து கட்டிடம் தரைமட்டமான விபத்தில் பலி எண்ணிக்கை 39 ஆக உயர்ந்தது. இடிபாடுகளில் சிக்கி உயிர் இழந்த அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுவிட்டதால் மீட்பு பணிகள் முடிவுக்கு வந்ததாக ரஷியாவின் அவசரகால அமைச்சகம் தெரிவித்தது.
* ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கியாஸ் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிர் இழந்தனர். 44 பேர் படுகாயம் அடைந்தனர்.
* சீனாவின் புஜியான் மாகாணத்தில் பிங்டான் கவுண்டியில் சரக்கு கப்பலுடன் மோதிய மீன்பிடி கப்பல் கடலில் கவிழ்ந்து மூழ்கியது. இதில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 8 பேரை காணவில்லை.
* பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை வழக்கில் சவுதி அரேபிய கோர்ட்டில் விசாரணை தொடங்கியது. குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 11 பேரில் 5 பேருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என அரசு வக்கீல் வாதாடினார்.