டாக்கா,
வங்காளதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சிக்கு எதிராக உருவான அமைப்பு ஹெபாஜத் இ இஸ்லாம். மத பண்டிதர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் இணை பொது செயலாளர் மவுலானா முப்தி மமுனுல்.
இவர், பங்கபந்துவின் சிலைக்கு எதிரான நிலையை கொண்டுள்ளார். இதனை அந்நாட்டின் சுனாம்கன் மாவட்டத்தில் நோவாகாவன் கிராமத்தில் வசித்து வரும் இந்து இளைஞர் ஒருவர் முகநூலில் விமர்சித்து உள்ளார்.
இதனையடுத்து கடந்த புதன்கிழமை ஆயுதங்களுடன் அந்த கிராமத்திற்குள் புகுந்த கும்பல் ஒன்று அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது. இதில் கிராமத்தில் இருந்த 70 முதல் 80 வீடுகள் சூறையாடப்பட்டன.
இதனால், அச்சமடைந்த இந்துக்கள் பலர் தங்களை காப்பாற்றி கொள்ள வீடுகளை விட்டு வெளியேறி தப்பி சென்றனர். அந்த கும்பல் வீடுகளை தாக்கியதுடன், கொள்ளையடித்தும் சென்றது. இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அன்றிரவே இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இதேபோன்று அடையாளம் தெரியாத 1,500 பேர் மீது போலீசார் மற்றொரு வழக்கும் பதிவு செய்தனர். சந்தேகத்திற்குரிய முக்கிய நபரான ஷாகிதுல் இஸ்லாம் சுவாதின் நேற்று கைது செய்யப்பட்டார். பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கில் தேராய் உபஜில்லா பகுதியை சேர்ந்த 3 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். இதனால், இந்து மக்கள் வசிக்கும் கிராமத்தில் தாக்குதல் நடத்திய வழக்கில் 33 பேர் வரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.