மாஸ்கோ,
ரஷ்ய ராணுவத்தின் உளவு பிரிவில் தளபதியாக பணிபுரிந்தவர் செர்கெய் ஸ்கிரிபால். ஓய்வு பெற்ற பின்னர் இவர் இங்கிலாந்து நாட்டிற்காக உளவு வேலையில் ஈடுபட்டு உள்ளார் என தெரிய வந்தது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், உளவாளிகள் பரிமாற்றம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த 2010ம் ஆண்டு இவர் இங்கிலாந்து நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து இங்கிலாந்தில் வசித்து வந்த செர்கெய், சாலிஸ்பரி நகரில் மார்ச் 4ந்தேதி தனது மகள் யூலியாவுடன் இருந்தபொழுது அடையாளம் தெரியாத விஷபொருள் ஒன்றை இருவரும் முகர்ந்துள்ளனர். இதில் மயக்கமடைந்து அவர்கள் சரிந்து உள்ளனர். தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், செர்கெய் விவகாரத்திற்கு பின்னால் ரஷ்யா உள்ளது என்று இங்கிலாந்து குற்றம் சாட்டியது.
அந்நாட்டின் பத்திரிக்கைகள் மற்றும் வெளியுறவு துறை மந்திரி ஜான்சன், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஆகியோர் இந்த குற்றச்சாட்டினை கூறியுள்ளனர். இதற்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியது.
இங்கிலாந்தின் இந்த குற்றச்சாட்டிற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி ரஷ்ய அதிபரின் செய்தி தொடர்பு அதிகாரி டிமிட்ரி பெஸ்கோவ் இன்று செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இந்த குற்றச்சாட்டுகளுக்கு முறையான சான்றுகளை கொண்டு நிரூபிக்க வேண்டும். அல்லது இதற்காக இங்கிலாந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் குற்றச்சாட்டுகளை முட்டாள்தனம் நிறைந்தது என ரஷ்ய அதிபர் புதின் நேற்று கூறி நிராகரித்து விட்டார்.