உகான்,
சீனாவின் உகான் நகரில் 2019இன் இறுதியில் முதன் முதலாக கொரோனா தொற்று ஏற்பட்டு, பின்னர் உலகெங்கும் பரவியது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் பரவி, கடந்த 2 ஆண்டுகளாக அடுத்தடுத்து கொரோனா அலைகள் உருவாகி கொண்டிருக்கின்றன.
உகான் வைரஸ் ஆய்வுக் கூடத்தில் இருந்து தான் முதன் முதலாக மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளை சீன அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்த நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அந்த நாட்டு அரசு கூறிவந்த நிலையில் ஜியாங்சூ, செச்சுவான், லியானிங், ஹூனான், ஹூபெய் உள்ளிட்ட 5 மாகாணங்களில் தற்போது வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. இந்த மாகாணங்களில் வைரஸ் பரவலைகட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் பெய்ஜிங் உட்பட 13 நகரங்களிலும் வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது.
ஒரு ஆண்டுக்கு பிறகு உகான் நகரில் மீண்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உகான் நகரில் பணி புரியும் வெளி மாநில பணியாளர்கள் ஏழு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கண்டறியப்பட்ட பின், 1.1 கோடி மக்கள் தொகை கொண்ட உகான் நகரின் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப் போவதாக நகர நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றுதல்கள் கண்டறியப்பட்டுள்ள பல்வேறு சீன நகரங்களில் தற்போது கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட யாங்ஸூ நகரின் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா தொற்றுதல்கள் ஏற்பட்டுள்ள குடியிருப்பு பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.