வாஷிங்டன்,
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 4,500-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர்.
உலக நாடுகளில் பரவி வரும் கொரோனாவால் அமெரிக்காவில் மட்டும் இதுவரை 41 பேர் பலியாகி உள்ளனர். 20 மாகாணங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கெரேனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் செய்வதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கைக்காக 50 பில்லியன் டாலர்களை டிரம்ப் ஒதுக்கி உள்ளார். அனைத்து மாகாணங்களிலும் கொரோனா அவசர சிகிச்சை மையங்களை நிறுவ அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம், கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மற்றும் தொடர் நடவடிக்கைகள் மூலமாக நாங்கள் எங்கள் குடிமக்களுக்கான அச்சுறுத்தலைக் கணிசமாகக் குறைப்போம். வரும் வாரங்களில் நாம் அனைவரும் மாற்றங்களையும் மற்றும் தியாகங்களையும் செய்ய வேண்டியிருக்கும், ஆனால் இந்த குறுகிய கால தியாகங்கள் நீண்ட கால ஆதாயத்தை தரும். அடுத்த எட்டு வாரங்கள் முக்கியமானவை. என்று தெரிவித்துள்ளார்.