காபூல்,
ஆப்கானிஸ்தான் நாட்டின் மைதான் வார்தக் மாகாணத்தில் ஜல்ரெஜ் மாவட்டத்தில் சாலையோரம் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், வெடிகுண்டுகள் வெடித்ததில் 5 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
இதுதவிர 9 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த சம்பவத்திற்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த வெடிகுண்டு சம்பவம் பற்றிய தகவலை மாகாண கவர்னர் அலுவலகம் உறுதிப்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2 தினங்களுக்கு முன் கோர் மாகாணத்தில் பிரோஷ் கோ நகரில் காவல் அலுவலகத்திற்கு வெளியே நடந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர். 90 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்நாட்டில் ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் நீண்ட கால போர் நடந்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எனினும், இதில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை. ஒருபுறம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோதிலும், மறுபுறம் பயங்கரவாத தாக்குதல்களிலும் அந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது.