லண்டன்
இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் மெர்கல் திருமணம், பிரிட்டனின் விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று மாலை நடைபெறவுள்ளது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருந்தினர்கள் வரத்தொடங்கி உள்ளனர்.
இங்கிலாந்து இளவரசர் ஹரியின் திருமணத்திற்காக அமெரிக்காவே இங்கிலாந்துக்கு திரண்டு வந்திருக்கிறது.
நியூயார்க், டென்னசி, ஜார்ஜியா என்று பல பகுதிகளிலிருந்து மக்கள் பிரித்தானியா வந்திறங்கியிருக்கிறார்கள், சியாட்டிலைச் சேர்ந்த கிறிஸ் பார்ன்ஸ் ராஜ குடும்பத்தின் பரம ரசிகை. ஹரிக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்ற செய்தி கேட்ட நொடியே அவரது திருமணத்தைக் காண்பதற்கு ஆயத்தங்கள் செய்ய ஆரம்பித்து விட்டார். ராணியை சந்தித்திருக்கிறார், இளவரசர் ஆண்ட்ரூ, கேட் - வில்லியம் திருமணம் ஆகிய நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறார். இப்போது ஹரியின் திருமணத்தைக் காண்பதற்காக 5000 மைல்கள் கடந்து தன் மகள், தன் பேத்தி என மூன்று தலைமுறையின் பிரதிநிதிகளாக இங்கிலாந்துக்கு வந்திருக்கிறார்கள்.
அவருக்கு ஒரே ஒரு விடயம் முக்கியம், அதாவது திருமண மாப்பிள்ளையையும் பெண்ணையும் பார்க்க வசதியாக ஒரு இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும், அவ்வளவுதான். இன்னொரு ரசிகைக்கு சற்று பெரிய ஆசை, அதாவது ஹரியும் மெர்க்கலும் தன்னை ஒரு முறை திரும்பிப் பார்க்க வேண்டும், ஒரு முறை லேசாக புன்னகைக்க வேண்டும், அவ்வளவு கூட்டத்தில் சற்று கடினம்தான், என்றாலும் நம்பிக்கையுடன் வின்ஸ்டர் கேஸ்டில் முன் காத்திருக்கிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ராஜ குடும்பத்தின் ரசிகர்கள்.