உலக செய்திகள்

தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா போலீசில் சரணடைய மறுப்பு

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் போலீசில் சரணடைய மறுத்து விட்டார்.

மேலும் கொரோனா காலத்தில் சிறை தண்டனை என்பது மரண தண்டனைக்கு சமம் என அவர் ஆவேசமாக கூறினார்.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை தொடர்ந்து 9 ஆண்டுகள் அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா. இவர் தனது 9 ஆண்டு கால பதவி காலத்தில் தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எண்ணிலடங்கா அரசு சொத்துக்களை கொள்ளையடித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.இந்த ஊழல் குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜேக்கப் ஜூமா அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.துணை அதிபராக இருந்து வந்த சிரில் ராமபோசா அதிபராக பதவி ஏற்றார். அதனை தொடர்ந்து சிரில் ராமபோசா தலைமையிலான அரசு முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்தது.

இந்த ஊழல் வழக்குகள் மீது அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு விசாரணையை தொடங்கியது. இதில் ஒரே ஒரு முறை மட்டும் விசாரணைக்கு நேரில் ஆஜரான ஜேக்கப் ஜூமா, அதன்பிறகு சுப்ரீம் கோர்ட்டு பலமுறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. இதனை தொடர்ந்து அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கோர்ட்டை அவமதித்த குற்றத்துக்காக ஜேக்கப் ஜூமாவுக்கு 15 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த மாதம் 29-ந் தேதி தீர்ப்பு வழங்கினார்.ஜூலை 4-ந் தேதிக்குள் அவர் போலீசில் சரணடையவில்லை என்றால் அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதனிடையே இந்த தீர்ப்பு வெளியானது முதலே ஜேக்கப் ஜூமாவின் ஆதரவாளர்கள் அவரது சிறை தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் ஜேக்கப் ஜூமா போலீசில் சரண் அடைவதற்கு நீதிபதிகள் விதித்த காலக்கெடு நேற்று முன்தினம் இரவுடன் முடிவடைந்தது.அதனை தொடர்ந்து ஜேக்கப் ஜூமா கைது செய்யப்படுவதை தடுக்கும் விதமாக நாண்ட்லா நகரில் உள்ள அவரது வீட்டை அவரின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு மனித அரணை ஏற்படுத்தியுள்ளனர்.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் ஒரே இடத்தில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தடையை மீறி நூற்றுக்கணக்கான மக்கள் ஜேக்கப் ஜூமா வீடு முன்பு திரண்டுள்ளனர்.

இதனிடையே ஜேக்கப் ஜூமா தனக்காக தனது வீட்டை சுற்றி மனித அரணை ஏற்படுத்தியுள்ள ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் தான் போலீசில் சரணடைய போவதில்லை என தெரிவித்தார்.

இது குறித்து அவர் பேசியதாவது:-

நான் இன்று சிறைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு தொற்றுநோய் உச்சத்தில் இருக்கும் இந்த சமயத்தில் எனது வயதில் என்னை சிறைக்கு அனுப்புவது எனக்கு மரண தண்டனை விதிப்பதை போன்றது. தென் ஆப்பிரிக்காவில் மரண தண்டனை விதிப்பது அரசியலமைப்புக்கு விரோதமானது என்று 1995-ல் அறிவிக்கப்பட்டது. போலீசார் என்னை கைது செய்ய துணிந்தால் ஒரு குழப்பமான மோதல் ஏற்படும். ஆப்பிரிக்கா நிறவெறி ஆட்சிக்கு வேகமாக செல்கிறது. விசாரணையின்றி சிறையில் அடைக்கப்படுவது நிறவெறி தடுப்பு காவலில் இருந்து வேறுபட்டது அல்ல.

இவ்வாறு ஜேக்கப் ஜூமா பேசினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்