பெர்லின்,
அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் அரசு ஒப்புக் கொண்டது. அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்த வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்தார். மேலும், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தினார். இதற்கு பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ஜோ பைடன், ஈரான் அரசு அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுவதாக ஒப்புக்கொண்டால் அணுசக்தி ஒப்பத்தத்தில் மீண்டும் அமெரிக்கா இணையும் என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஈரான் தன் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை அகற்றுவதற்கு 3 மாத காலம் கெடு விதித்துள்ளது. அதன்பின்னர் அணுசக்தி நிலையங்களின் கண்காணிப்பு காட்சிகள் அழிக்கப்படும் எனன்றும் கூறி உள்ளது
இந்நிலையில் அணுசக்தி விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளின் ராஜதந்திர நடவடிக்கைகளை ஈரான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜெர்மனி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக ஜெர்மனி வெளியுறவு மந்திரி ஹெய்கோ மாஸ் கருத்து தெரிவிக்கையில், மேற்கத்திய நாடுகளில் இருந்து வரும் ராஜதந்திர நடவடிக்கைகளை ஈரான் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஈரானின் இந்த மூன்று மாத காலக்கெடுவையும், அணுசக்தி ஒப்பந்தத்தின் மற்ற கூட்டாளர்களுடன் சேர்ந்து, அமெரிக்கா இந்த ஒப்பந்தத்திற்கு எவ்வாறு திரும்ப முடியும் என்பதையும் படிப்படியாக விவாதிக்க நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.