கம்பீரமான தோற்றம், பெண் கொரில்லாக்களுடன் காதல், தன் குழந்தைகளுக்கு அன்பான அப்பா என்று பல பொறுப்புகளையும் அழகாகச் செய்கிறது இந்த 18 வயது ஷபானி. நெதர்லாந்தில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் வளர்ந்தது ஷபானி. அம்மா, அப்பாவுடன் அமைதியான வாழ்க்கை. 2007-ம் ஆண்டு ஜப்பானுக்குக் கொண்டு வரப்பட்டது. இங்கே 3 பெண் கொரில்லாக்களுடன் குடும்பம் நடத்தி, 2 மகன்களுக்குத் தந்தையானது ஷபானி. நொடிக்கு ஒருமுறை அட்டகாசமாக முகபாவனைகளை மாற்றுவதில் ஷபானிக்கு இணை வேறு எதுவும் இல்லை.
மிக நளினமாகவும் புகைப்படத்தில் அழகாகவும் தோற்றம் அளிக்கிறது ஷபானி. இணையதளத்தில் வெளியாகும் ஷபானியின் புகைப்படங்களுக்கு ஏராளமான ஜப்பானிய பெண்கள் ரசிகைகளாக மாறி இருக்கின்றனர். ஒரு குடும்பத் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஜப்பானிய ஆண்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது, உலகிலேயே மிக அழகான கொரில்லா ஷபானிதான் என்கிறார்கள் ஜப்பானிய பெண்கள்.
ஒருநாளைக்கு எத்தனை முறை புகைப்படங்கள் எடுத்தாலும் சிறந்த முறையில் ஒத்துழைப்பு தருகிறது ஷபானி. ஹிகாஷியமா மிருகக்காட்சி சாலையில், ஷபானியால் பெண்களின் வருகை அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.