மாஸ்கோ,
இங்கிலாந்தில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை செலுத்தியவர்களில் ஒருவருக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டதை தொடர்ந்து, அந்த தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் அறிவித்து உள்ளது.
இதுபற்றி ரஷிய செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, தடுப்பு மருந்து பரிசோதனையில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளது. பரிசோதனையின் போது தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு நபருக்கு எத்தகைய பாதிப்பு என்று விவரிக்க முடியாத ஒரு விளைவு ஏற்பட்டால் அது அந்த மருந்தாலோ அல்லது வேறு காரணத்தாலோ கூட இருக்கலாம் என்றும், எனவே அதுபற்றி தீவிரமாக ஆய்வு நடத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து இருக்கிறது.
அத்துடன், மருத்துவ ரீதியிலான பரிசோதனை கட்டத்தில் ஒரு மருந்தின் சோதனையை நிறுத்தி வைப்பது வழக்கத்துக்கு மாறானது அல்ல என்றும் உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.