ஓஸ்லோ,
நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் நேற்று 12-வது சுற்று வெளிநாட்டு அலுவலக ஆலோசனை கூட்டம் ஒன்று நடந்தது. இதில், கடல்வழி வர்த்தகம், எரிசக்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் இடம் பெற்றன.
இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் வலைதள செய்தியில், இந்தியா தரப்பில் செயலாளர் சிபி ஜார்ஜ் மற்றும் நார்வே வெளிவிவகார அமைச்சகத்தின் பொது செயலாளர் டார்கெய்ர் லார்சன் முன்னிலையில் இந்த ஆலோசனைகள் நடந்தன.
அவர்கள் இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி மறுஆய்வு செய்ததுடன், அரசியல் விவகாரங்கள், வர்த்தகம், முதலீடு, கல்வி, அறிவியல், தொழில் நுட்பம், விண்வெளி மற்றும் ஆர்க்டிக் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை இன்னும் வலுப்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது என தெரிவித்து உள்ளது.