மாஸ்கோ,
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்பு துறை மந்திரிகள் பங்கேற்கும் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்றார். இதில், சீன பாதுகாப்பு மந்திரியுடன் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார்.
இதேபோல் இன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு துறை மந்திரிகள் மாநாட்டில் மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில், இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகளும் அறிவியல் மற்றும் தொழிற்சாலை துறைகளின் வலிமையுடன், கொரோனா வைரசின் பாதிப்புகளை குறைப்பதற்கான முக்கிய பணியில் பங்காற்றுவது என ஒப்புதல் அளித்தன.
இதுபற்றி இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரம் வெளியிட்ட செய்தியில், 3 நாடுகளின் பொது முன்னேற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஆனது உலக வளர்ச்சி, அமைதி மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது என்பதனை மந்திரிகள் குறிப்பிட்டனர்.
ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகளின் முத்தரப்பு ஒத்துழைப்பினை கூடுதலாக வலுப்படுத்துவதற்கான விசயங்களை பரிமாறி கொண்டனர் என்று தெரிவித்து உள்ளது.
இந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் சீன வெளிவிவகார துறை மந்திரி வாங் யி ஆகியோர் சந்தித்து பேசி கொண்டனர். இந்த சந்திப்பு இன்றிரவு நிறைவடைந்து உள்ளது.