வாஷிங்டன்,
ஒவ்வொரு நாளும் அமெரிக்கா கதிகலங்கிக்கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் பிணக்குவியல்கள்... இந்த பிணக்குவியல்களால் ஏற்பட்டுள்ள சோகம். துயரம். கண்ணீர் ஒரு பக்கம்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடெங்கும் உள்ள ஆஸ்பத்திரிகளில் லட்சோப லட்சம் அமெரிக்கர்கள் சேர்க்கப்பட்டு, அவர்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் வேதனை இன்னொரு புறம்...
அமெரிக்க வல்லரசு, இப்படித்தான் இப்போது கண்ணீரும், கம்பலையுமாக இருக்கிறது. அங்கு 9 லட்சத்துக்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் தாக்கி இருக்கிறது. ஏறத்தாழ 90 ஆயிரம் பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி இருக்கிறார்கள். சுமார் 51 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மரணத்தை தழுவி இருக்கிறார்கள். எஞ்சியவர்கள் அத்தனை பேரும் ஆஸ்பத்திரிகளில்... தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கவலையோடு படுத்திருக்கிறார்கள்.
இப்படி படுத்திருக்கிறவர்களின் முகத்தில் புன்னகையை தவழ வைக்கும் புனிதப்பணியில் ஒரு இந்திய வம்சாவளி சிறுமி ஈடுபட்டிருக்கிறார். இந்த சிறுமி, பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள கோன்ஸ்டகா உயர்நிலைப்பள்ளியின் 10-வது கிரேடு மாணவி, ஹிதா குப்தா.அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் ஊரடங்கால், வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கிற இந்த தருணத்தில் 15 வயதே ஆன இந்த சிறுமி, தன் வயதையொத்த சிறுமிகளைப்போன்று கேண்டி கிரஷ் விளையாடவில்லை. டெலிவிஷன் திரைகளில் அல்லது கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் திரைகளில் கார்ட்டூன் படங்களை பார்த்து உல்லாசமாக பொழுதுபோக்கவில்லை.
இவரால் பல நூறு கொரோனா நோயாளிகள், மரணப் போராட்டத்தின் மத்தியிலும் நம்பிக்கை வளர்க்கிறார்கள், நாம் குணம் அடைவோம், வீட்டுக்கு செல்வோம் என்று.
இதில் ஹிதா குப்தாவின் பங்களிப்புதான் முக்கியத்துவம் பெறுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தால் ஆஸ்பத்திரிகளில் படுத்திருக்கிற முதியோருக்கு, சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு இவர் தன் பிஞ்சுக்கரங்களால் கைப்பட வாழ்த்து அட்டைகள் தயாரித்து அனுப்புகிறார். அத்துடன் அவர்கள் கவலைகளை மறந்து சற்று இனிமையாக பொழுதைக்கழிக்கிற வகையில் புதிர் புத்தகங்கள், கதை புத்தகங்கள், வர்ணம் தீட்டும் புத்தகங்கள், கலர் பென்சில் பாக்கெட்டுகள், கிரேயான்ஸ் பாக்கெட்டுகள் ஆகியவற்றை அனுப்பி வருகிறார்.
கொரோனா வைரஸ் தாக்கிய பலரும் ஆஸ்பத்திரிகளில் படுக்கைகளில் எத்தனை கவலையுடன் இருப்பார்கள்... தங்களுக்கு அன்பானவர்களை பார்க்க முடியாமல், அவர்களோடு பேச முடியாமல் தவித்துக்கொண்டிருப்பார்கள்... நமது முதியோர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்... 40 சதவீதத்துக்கும் அதிகமான முதியவர்கள் தனிமையை உணர்ந்து வருந்துவதாக ஆராய்ச்சி ஒன்றின் மூலம் அறிந்திருக்கிறேன்.
இந்த நிச்சயமற்ற தருணத்தில், பல முதியோருக்கு பீதி இருக்கிறது. இந்த நேரத்தில் அவர்கள் தனிமையில் இல்லை என்பதை நாம் உணர்த்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். அந்த பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஆரம்பத்தில் நான் என் சொந்தப்பணத்தைக்கொண்டுதான் அவர்களுக்கு பரிசு தொகுப்புகளை அனுப்பி வந்தேன். உள்ளூரில் உள்ள 16 ஆஸ்பத்திரிகளுக்கு இப்படி செய்து வருகிறேன். எனது 9 வயது தம்பி திவித் குப்தா எழுதி அனுப்புகிற உற்சாகமூட்டும் குறிப்புகளையும் பரிசுத்தொகுப்புடன் சேர்த்து அனுப்புகிறேன்.
நான் இப்போது ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். இதன்மூலம் 7 மாகாணங்களில் 50 ஆஸ்பத்திரிகளில் உள்ள முதியோரையும், குழந்தைகளையும் நாங்கள் சென்றடைந்து இருக்கிறோம்.
- இப்படி சொல்லிக்கொண்டே போகிறார் ஹிதா குப்தா.
இதற்காக அவருக்கு பல தரப்பிலும் பாராட்டு குவிகிறது.
டெல்லியில் உள்ள இந்திய தூதரகம் தனது பேஸ்புக் பக்கத்தில், உங்களுக்கு உத்வேகம் வேண்டுமா? அமெரிக்காவில் பென்சில்வேனியாவில் உள்ள 15 வயது சிறுமி ஹிதா குப்தாவை பாருங்கள். பிரைட்டன் எ டே என்ற தனது தொண்டு நிறுவனத்தின்மூலம் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகிற மக்களின் வாழ்க்கையை அவர் பிரகாசம் ஆக்கி வருகிறார் என கூறி பாராட்டி இருக்கிறது.
அது மட்டுமல்ல, யாருக்கெல்லாம் உற்சாகம் தேவைப்படுகிறதோ, அவர்களுக்கெல்லாம் அவர் அன்பையும், நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தனது வாழ்த்து அட்டைகள், பரிசுகள் மூலம் அனுப்பி வருகிறார். கொரோனா வைரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலகட்டத்தில், அவர் தன் கைகளால் எழுதிய குறிப்புகள், பரிசுகளை அனுப்பி அவர்களை உற்சாகப்படுத்துகிறார். அவர்கள் தனிமையில் இருந்து மீள துணை நிற்கிறார். இன்னும் அதிக சக்தி கிடைக்கட்டும் ஹிதாவுக்கு என்றும் புகழ்ந்து தள்ளி இருக்கிறது.
சந்தோஷங்களில் பெரிய சந்தோஷமே, அது யாருக்கு தேவைப்படுகிறதோ அவர்களுக்கு அதைக் குறைவின்றி கிடைக்கச்செய்து மகிழ்வதுதான்.. அதைத் தான் ஹிதா குப்தாவும் செய்து வருகிறார். நாளைய நம்பிக்கை நட்சத்திரம்!