நியூயார்க்,
வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடன் ஈரான் 2015ம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது.
முழுமையான கூட்டு செயல் திட்டம் என்ற பெயரிலான இந்த ஒப்பந்தம், 2 முக்கிய அம்சங்களை கொண்டது. ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை கை விட வேண்டும்; குறிப்பாக செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை ஈரான் 15 ஆண்டுகளில் குறைக்க வேண்டும்; இதற்கான எந்திரத்தை நிறுவுவதை 10 ஆண்டுகளில் குறைக்க வேண்டும்; இதற்கு பதிலாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அந்த நாட்டின் மீது விதித்த பொருளாதார தடைகளை திரும்பப்பெற வேண்டும் என்பதாகும்.
ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக ஜனாதிபதி டிரம்ப் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.
இந்தநிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க், நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம், ஐரோப்பிய கூட்டமைப்புக்கும், பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கும் நல்லது. எனவே ஈரான் இந்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருக்கிறவரையில், ஐரோப்பிய கூட்டமைப்பும் நீடிப்பதில் உறுதி கொண்டு உள்ளது என்று கூறினார்.
மேலும் அவர் பேசும்போது, ஈரானின் பிராந்திய நடத்தை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை குறித்த கவலைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது என்றும் குறிப்பிட்டார்.