அங்காரா,
துருக்கியில் தாயீப் எர்டோகன் அதிபராக உள்ளார். 2016-ம் ஆண்டு ஜூலை 15-ந் தேதி ராணுவத்தில் ஒரு பிரிவினர் அவரது ஆட்சியை கவிழ்க்க புரட்சியில் ஈடுபட முயற்சித்தனர். அதிபர் எர்டோகன் அரசு ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்றும் அவர்கள் அறிவித்தனர். ஆனால் சில மணி நேரத்தில் நிலைமை மாறியது. நாடு முழுக்க முழுக்க அதிபரின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. பொது மக்கள் ஆதரவுடன் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை அதிபர் எர்டோகன் முறியடித்தார்.
இந்தப் புரட்சிக்கு அமெரிக்காவில் வாழ்ந்து வருகிற மதத் தலைவர் குலன் என்பவர்தான் காரணம் என துருக்கி அரசு நம்புகிறது. அவரை நாடு கடத்திக்கொண்டு வர துருக்கி அரசு முயற்சி எடுத்தும், அதை அமெரிக்க அரசு கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் புரட்சி முயற்சிக்கு துணை போன அரசு அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் என பல தரப்பினரும் அங்கு பல்லாயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. இதற்கு சர்வதேச சமூகம் தனது கண்டனத்தை பதிவு செய்தது.
இந்த நிலையில் அங்கு ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதற்காக இதுவரை சுமார் 2 ஆயிரம் பேருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுபற்றி துருக்கி அரசின் செய்தி நிறுவனமான அனடோலு செய்தி நிறுவனம் நேற்று முன்தினம் குறிப்பிடுகையில், துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக இதுவரை 1,934 பேருக்கு கோர்ட்டுகள் வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கி உள்ளன. அதிலும் குறிப்பாக 978 பேர் சாதாரண முறையிலான வாழ்நாள் சிறைத்தண்டனையையும், 956 பேர் மிகக்கடுமையான வாழ்நாள் சிறைத்தண்டனையையும் அனுபவிப்பார்கள். இந்த 956 பேருக்கு விதிக்கப்பட்டிருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை, மரண தண்டனைக்கு மாற்றாக விதிக்கப்பட்டதாகும். இவர்கள் மற்ற கைதிகள் போல சாதாரண முறையில் வாழ்க்கையை கழிக்க முடியாது என கூறியது.
மேலும், ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தொடர்பாக 289 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவற்றில் 239 வழக்குகள் முடிந்து விட்டன. மீதி 50 வழக்குகளில் அங்காராவில் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இஸ்தான்புல் நகரத்தில் 9 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. எஞ்சிய வழக்குகள், நாட்டின் பிற பகுதிகளில் நிலுவையில் உள்ளன என கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க வாழ் மத தலைவர் குலனுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என்பதற்காக 3 ஆயிரத்து 50 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். 1,123 பேருக்கு ஓராண்டு முதல் 20 ஆண்டுகள் வரை பல்வேறு கால அளவிலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக துருக்கியில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
குலனின் நெருங்கிய உறவினர் செல்மான் குலனுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அவரும் தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது. குலனின் சகோதரர் குத்பெதீன் குலனுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.