நியூயார்க்,
அமெரிக்காவில் நியூயார்க் புறநகரான ராக்லேண்ட் கவுண்டியில் யூத மக்கள் திரளாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அங்குள்ள யூத மத குரு வீட்டில் நேற்று முன்தினம் இரவு ஹனுக்கா என்று அழைக்கப்படுகிற ஒளி விழாவை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
அதில் ஏறத்தாழ 100 பேர் கலந்து கொண்டிருந்தனர். மத குரு மெழுகுவர்த்தி ஏற்றிக்கொண்டிருந்தார். எல்லோரும் அதையே பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென, கருப்பு நிற மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்தார். அவர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து அங்கிருந்தவர்களை சரமாரியாக குத்த ஆரம்பித்தார்.
அங்கிருந்தவர்கள் சுதாரித்துக்கொண்டு தப்பி ஓடத்தொடங்கினர்.
அதைத் தொடர்ந்து அந்த நபர் கத்தியால் குத்துவதை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி அருகில் உள்ள யூத வழிபாட்டுதலத்துக்குள் நுழைய முயற்சித்தார். ஆனால் அங்கு அவர் நுழைந்து விடாதபடிக்கு கதவை அடைத்து விட்டனர்.
இதற்கு இடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் படையினர் அங்கு விரைந்து வந்து, அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.
கத்திக்குத்து நடத்திய நபரை அவர்கள் அந்தப் பகுதியில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
இதற்கிடையே கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த 5 பேர் அங்கிருந்து மீட்கப்பட்டு ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருப்பினும் அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு நியூயார்க் மாகாண கவர்னர் ஆன்ட்ரூ கியோமோ கண்டனம் தெரிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த இழிவான, கோழைத்தனமான செயல் கண்டு வேதனை அடைந்தேன். நியூயார்க்கில் யூத மத விரோதத்தை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். இந்த தாக்குதலை நடத்தியவர் சட்டப்படி பொறுப்பேற்க வைக்கப்படுவார் என கூறி உள்ளார்.
இந்த சம்பவத்தின்போது அங்கு இருந்த ஆரோன் கோன் (வயது 65) என்பவர் கூறுகையில், சம்பவத்தின்போது, நான் உயிர் பிழைப்பதற்காக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். இந்த தாக்குதலை நடத்தியவர் பயன்படுத்திய கத்தி ஒரு துடைப்பத்தின் அளவுக்கு இருந்ததை பார்த்தேன் என தெரிவித்தார்.
இந்த கத்திக்குத்து சம்பவத்துக்கு இஸ்ரேல் அதிபர் ருவன் ரிவ்லின் அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துள்ளார்.
இதையொட்டி அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்த கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவாக குணம் அடைவதற்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம். இந்த தீய செயலை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என கூறி உள்ளார்.