ஜெனீவா,
கொரோனா வைரசின் மாறுபாடான ஒமைக்ரான் வைரஸ் முதன் முதலில் நவம்பர் 24 அன்று தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் தாக்கும் இந்த வைரசானது தற்போது பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இது கொரோனாவை விட பலமடங்கு அதிகம் பரவும் தன்மை கொண்டது என்று உலக சுகாதார அமைப்பு ஏற்கெனவே கூறி இருந்தது.
ஒமைக்ரான் பரவலால் பல நாடுகள் மீண்டும் பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்தியாவிலும் சில மாநிலங்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்த்தல், இரவு நேர ஊரடங்கு ஆகிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டு ஒரு மாதங்கள் முடிவடைந்த நிலையில், அதன் பரவல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ஒமைக்ரான் வைரஸ் கடந்த ஒரு மாதத்தில் 108 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரசால் 1,51,368 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதிலிருந்து இதன் பரவும் தன்மையை அறிந்துகொள்ள முடியும். குறிப்பாக ஒமைக்ரானால் பிரிட்டன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.