இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பிரதமராக இம்ரான்கான் பொறுப்பேற்றார்.
பாகிஸ்தானில் ஏற்கனவே பல்வேறு பொருளாதார சிக்கல்கள் நீடித்து வந்த சூழலில் இம்ரான்கான் பதவியேற்ற பின்னர் அங்கு நிலைமை மேலும் மோசமானது. அரசின் பல்வேறு துறைகள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
இதனால் சர்வதேச நாடுகளிடம் இருந்து அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் உருவானது. அப்படி வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் பாகிஸ்தான் அரசு திணறி வருகிறது.
இதற்கிடையில் எதிர்க்கட்சிகள் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசை பதவி விலகக்கோரி அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்த நெருக்கடிகளையெல்லாம் சமாளித்து ஆட்சியை நடத்துவதற்காக இம்ரான்கான் அரசு பல்வேறு அவசர சட்டங்களை அமல்படுத்தி வருகிறது. நாடாளுமன்ற அமர்வு நடைபெறாத சமயத்தில் அவசரகால சூழ்நிலைகளில் மட்டுமே பிறப்பிக்கப்பட வேண்டிய இத்தகைய அவசர சட்டங்களை ஆட்சி நடத்துவதற்காகவே இம்ரான்கான் அரசு அடிக்கடி அமல்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த வகையில் ஆட்சியை தொடங்கிய 2018-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 54 அவசர சட்டங்களை இம்ரான்கான் அரசு அமல்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இம்ரான்கான் அரசுக்கு எதிராக அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் காசி பயீஸ் இசா மற்றும் அமினுத் தின் கான் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இருதரப்பு வாதங்களை முழுமையாக கேட்டறிந்த நீதிபதிகள் அவசர சட்டங்களை பிறப்பிக்கும் விவகாரத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக தீர்ப்பளித்தனர்.
பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன.மார் 100 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட தீர்மானத்தை அந்நாட்டு நாடாளுமன்ற செயலரிடம் அளித்தனர்.
பாகிஸ்தான் சட்டப்படி, 68 எம்.பி.க்கள் தீர்மானம் அளித்தால் மூன்று முதல் ஏழு நாள்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
156 எம்.பி.க்களைக் கொண்ட இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹரீக் இன்சாப் கட்சி, 5 கட்சிகளின் கூட்டணியுடன் 177 எம்.பி.க்களின் பலத்துடன் ஆட்சியில் உள்ளது. எதிர்க்கட்சிகளிடம் 162 எம்.பி.க்கள் உள்ளனர்.
மொத்தம் 342 எம்.பி.க்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், பிரதமரையும் அவரது அமைச்சரவையும் நீக்க நம்பிக்கை வாக்கெடுப்பில் 172 வாக்குகளை எதிர்க்கட்சிகள் பெற வேண்டும். இம்ரான் கானுக்கு எதிராக கூட்டணி கட்சியினரே எதிர்த்து வாக்களித்தால்தான் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும்.
பாகிஸ்தானின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக கருதப்படும் இம்ரான் கான், 1957 க்குப் பிறகு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் வீழ்ந்த நாட்டின் முதல் தலைவர் என்ற பெருமையை விரைவில் பெறுவாரா? என தெரியவரும்.
இம்ரான் கானுக்குப் பதிலாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆசிப் அலி சர்தாரியை பிரதமராக முன்னிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தனது அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர்களை இம்ரான் கான் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி தாக்கினார் மற்றும் தீர்மானம் தோல்வியுற்றால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கூறி உள்ளார்.
மேலும் நடுநிலை வகிக்கும் என கூறிய பாகிஸ்தான் ராணுவத்தையும் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
விலங்குகளுக்கு நன்மைக்கும் தீமைக்கும் வித்தியாசம் தெரியாது.மனிதர்கள் தங்கள் மனசாட்சிக்கு ஏற்ப செயல்படுகிறார்கள். விலங்குகள் மட்டுமே அஞ்ஞானமாக இருக்கின்றன, என்று அவர் கூறினார்.