லாகூர்,
மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அவ்வளவு எளிதாக மறந்து விடமுடியாது. கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த 10 பயங்கரவாதிகள் தங்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் ஈவுஇரக்கமின்றி காட்டுமிராண்டித்தனமாக சுட்டு தள்ளினர். உலகையே உலுக்கிய இந்த பயங்கர தாக்குதலில் 18 போலீசார் உள்பட 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் தவிர மற்ற 9 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிப்பட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான். பாகிஸ்தான் பயங்கரவாதிகள்தான் இந்த தாக்குதலை நடத்தினார்கள் என உறுதிசெய்யும் வகையில் ஆதாரம் இருந்தும் எங்கள் மண்ணில் இருந்து தாக்குதல் நடத்தப்படவில்லை என மறுப்பு தெரிவித்தது. சர்வதேச அளவில் பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது விசாரிப்பதாக கூறியது பாகிஸ்தான். இருப்பினும் பாகிஸ்தான் கமாண்டராக இருந்து செயல்பட்ட லக்வி உள்பட பிற குற்றவாளிகளை காப்பாற்றும் பணியையே பாகிஸ்தான் மேற்கொண்டது.
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை சர்வதேச பயங்கரவாதி என ஐ.நா. சபை அறிவித்து உள்ளது. அவனது தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.65 கோடி) விலை வைத்து உள்ளது. ஐ.நா. சபையும், அமெரிக்க அரசும் அவனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது. ஆனால் இன்று வரையில் பாகிஸ்தான் சுதந்திரமாக திரிகிறான் ஹபீஸ் சயீத், மேலும் அரசியல் கட்சியை தொடங்கி உள்ளான். மும்பை தாக்குதல் தொடர்பாக சர்வதேச நாடுகள் கண்டனம், நிர்பந்தம் தொடர்பாக விசாரிப்பதாக கூறியது பாகிஸ்தான். அதன்படி லாகூர் கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீலாக பாகிஸ்தான் கூட்டு விசாரணை முகமையை சேர்ந்த சவுதாரி அசார் நியமிக்கப்பட்டு இருந்தார். தொடக்கம் முதலே இந்த வழக்கில் அவர்தான் ஆஜராகி வந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் சவுதாரி அசாரை மும்பை தாக்குதல் வழக்கில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளது. அவருடைய பணி இந்த வழக்கில் இனி தேவையில்லை என்றும், அவர் அரசு வழிமுறைப்படி இந்த வழக்கை கையாளவில்லை என்றும் இதற்கு உள்துறை அமைச்சகம் காரணம் கூறி உள்ளது. அதேநேரம் பெனாசிர் பூட்டோ படுகொலை வழக்கில் அவர் தொடர்ந்து அரசு தரப்பு வக்கீலாக நீடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சவுதாரி அசார் நீக்கம் இந்தியாவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தலைமை வழக்கறிஞராக செயல்பட்ட சவுதாரி அசார் மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு இடையே வழக்கை கையாளுவதில் வேறுபாடு நிலவியது காரணமாகவே அவர் நீக்கப்பட்டு உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கிறது. மும்பை தாக்குதல் வழக்கில் பாகிஸ்தான் சிறப்பு கவனத்தை செலுத்துகிறது. சவுதாரி அசார் இவ்விவகாரத்தில் அரசின் வழிமுறையின்படி செயல்படாமல் இருந்து இருக்கலாம். சட்டத்தின்படியே அவர் முக்கிய வழக்குகளில் செயல்பட்டு உள்ளார், என்று அதிகாரிகள் தரப்பில் விளக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் அசாரை நாடிய போது, மும்பை தாக்குதல் வழக்கை விசாரிப்பதை நிறுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டு உள்ளார். இவ்வழக்கு விசாரணையில் இனிநான் இடம்பெற மாட்டேன் என கூறிஉள்ளார். இம்முடிவு தொடர்பாக பாகிஸ்தான் அரசு எந்தஒரு விளக்கமும் கொடுக்கவில்லை எனவும், இது வழக்கமான நடைமுறை எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.