இஸ்லாமாபாத்,
கர்நாடகத்தில் உடுப்பி, தட்சிண கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் (பர்தா) அணிந்து கல்லூரிக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் குந்தாப்புராவில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வரக்கூடாது என்று அக்கல்லூரி முதல்வர் தடை விதித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள்.
இந்த நிலையில் கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிக்கு அனைவரும் சீருடை அணிந்து தான் வர வேண்டும் என்றும், உடை அணிவதில் கட்டுப்பாடு விதித்து மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் மாநில அரசின் ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ஐகேர்ட்டில் முஸ்லிம் மாணவிகள் வழக்கு தெடர்ந்தனர். இந்த வழக்கு 8-ந்தேதி (அதாவது நேற்று) ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரானை இன்றும் நடைபெற உள்ளது.
இந்த மோதல் விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தில் 3 நாட்கள் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கடலோர மாவட்டம் உள்பட பதற்றமான பகுதிகளில் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் ஹிஜாப் கோஷம் வலுத்து வரும் நிலையில், பர்தா அணிந்த மாணவர்களை வகுப்பறைக்குள் தடை செய்ததைக் கண்டித்து பாகிஸ்தான் மந்திரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது அடிப்படை மனித உரிமை மீறல் என பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மஹ்மூத் குரேஷி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
"முஸ்லிம் பெண்களின் கல்வியைப் பறிப்பது என்பது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும். இந்த அடிப்படை உரிமையை மறுப்பதும், ஹிஜாப் அணிந்ததற்காக அவர்களைப் பயமுறுத்துவதும் முற்றிலும் அடக்குமுறையாகும். இது முஸ்லிம்களை அடக்க நினைக்கும் இந்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதி என்பதை உலகம் உணர வேண்டும் என கூறினார்.
இதுகுறித்து, பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மந்திரி பவாத் ஹுசைன் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது,
"இந்தியாவில் நடப்பது திகிலூட்டும் வகையில் உள்ளது. இந்திய சமுதாயம் நிலையற்ற தலைமையின் கீழ் அதிவேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. ஹிஜாப் அணிவது தனிப்பட்ட விருப்பம், எந்த ஆடை அணிய வேண்டும் என குடிமக்களுக்கும் தேர்வு செய்ய உரிமை வழங்கப்பட வேண்டும்," என்று டுவீட் செய்துள்ளார்.