இஸ்லாமாபாத்,
லண்டனில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றிய போது எங்களுக்கு அமைதியின் மீது நம்பிக்கை உள்ளது. ஆனால் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்பவர்களை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். நாங்கள் சரியான பதிலடியை கொடுப்போம். அவர்கள் புரிந்துக்கொள்ளும் மொழியில் பதிலடி இருக்கும். பயங்கரவாதத்தை ஏற்க முடியாது. என்றார்.
பாகிஸ்தான் மீது நடைபெற்ற 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' குறித்து பேசுகையில் இந்திய வீரர்களின் உயிர்களைப் பறித்தால் பதிலடி தரப்படும் என்றும் எப்படி பதிலடி தருவது என்று தமக்குத் தெரியும் என்றார். துல்லியத் தாக்குதல் நடத்திய செய்தியை மறைக்காமல் பாகிஸ்தானுக்கு தகவல் அளித்து உடல்களை எடுத்து செல்லும்படி கூறியதாக பிரதமர் மோடி பலத்த கரவொலிகளுக்கு இடையே தெரிவித்தார். இந்திய ராணுவம் பாகிஸ்தானில் 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' நடத்தியது என்பதை அந்நாட்டு அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இப்போது 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' தொடர்பான மோடியின் பேச்சு தவறானது மற்றும் அடிப்படையற்றது என பாகிஸ்தான் கூறிஉள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளார் முகமது பைசால் பேசுகையில், இந்திய கூறிவரும் 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' தவறானது மற்றும் அடிப்படையற்றது என்றார். தொடர்ந்து பொய்யை சொல்வதால் அது உண்மையாகிவிடாது எனவும் பேசிஉள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது என்ற மோடியின் பேச்சுக்கு பதிலளித்து உள்ள முகமது பைசால், பாகிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு இந்தியா ஆதரவளிக்கிறது என குற்றம் சாட்டிஉள்ளார்.