புதுடெல்லி,
பசுபிக் பெருகடலில் அமைந்துள்ள தீவு நாடு டோங்கோ. சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது.
இதற்கிடையில், டோங்கோ தீவு நாட்டில் கடலுக்கு அடியில் உள்ள ஒரு எரிமலை பயங்கர சத்தத்துடன் கடந்த மாதம் 15-ம் தேதி வெடித்து சிதறியது. இதனால், சுனாமி அலை டோங்கோ தீவை தாக்கியது. இந்த சுனாமி தாக்குதலில் டோங்கோ தீவு நிலைகுலைந்தது. மேலும், 6 பேர் உயிரிழந்தனர். பலர் காணமால் போனதால் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், டோங்கோ நாட்டில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு மாநிலங்களவையில் இன்று மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மத்திய பட்ஜெட் மீதான விவாதம் தொடர்பாக மாநிலங்களவை இன்று கூட்டப்பட்ட நிலையில் டோங்கோ தீவில் ஏற்பட்ட சுனாமியால் உயிரிழந்தவர்கள் மந்திரிகள் அஞ்சலி செலுத்தினர். டோங்கோ நாட்டிற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
அதேபோல், மலேசியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.