கீவ்,
உக்ரைன் நாடு, நேட்டோவில் சேரும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2022-ம் ஆண்டு பிப்ரவரியில், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற பெயரில் ரஷியா போர் தொடுத்தது. இந்த போரானது நடப்பு ஆண்டு பிப்ரவரியுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்யும். எனினும், போரானது முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
போர் எதிரொலியாக உக்ரைனில், வீரர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்து சென்று விட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் முயற்சியாக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்த பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது ஒருபுறம் நடந்தபோதும், ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனில் கார்கீவ் நகரில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரெயில் மீது ரஷியாவின் டிரோன்கள் திடீர் தாக்குதல் நடத்தின. நேற்றிரவு நடந்த இந்த தாக்குதலில், ரெயிலின் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. ரெயிலில் 200 பேர் பயணித்திருக்க கூடும் என கூறப்படுகிறது.
அவர்களில் 5 பயணிகள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. உக்ரைனின், ஒடிசா நகரில் கருங்கடல் துறைமுக நகரில் நேற்று முன்தினம் மற்றொரு தாக்குதலை ரஷியா நடத்தியது.
இதில், 50-க்கும் மேற்பட்ட டிரோன்கள் ஈடுபடுத்தப்பட்டன. இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, இந்த சம்பவத்தில் 3 பேர் பலியானார்கள். 2 குழந்தைகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தெரிவித்தனர். இதில், 5 அடுக்குமாடி கட்டிடங்களும் சேதமடைந்தன.
குளிர்காலம் மக்களை வாட்டி வரும் சூழலில், மின்சார வசதி மற்றும் வெப்பம் ஏற்படுத்தி கொள்ளும் வசதியை தாக்கி அழிக்கும் முயற்சியாக, மின்சார சட்டகங்களை இலக்காக கொண்டு, ரஷியா இந்த டிரோன் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.