லண்டன்
குண்டுவெடிப்பு
இங்கிலாந்து நாட்டில், மான்செஸ்டர் நகரில் உள்ள அரங்கம் ஒன்றில் கடந்த 22-ந் தேதி இரவு அமெரிக்க பாடகி அரியானா கிராண்டேயின் பாப் இசை நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சி முடிந்து, அவர் மேடையில் இருந்து இறங்கி வெளியேறிய நிலையில், அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இந்த குண்டுவெடிப்பில், குழந்தைகள் உள்பட 22 பேர் பலியாகினர். அவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். பலியானவர்களில் சபி ரோஸ் ரூசஸ், ஒலிவியா கேம்பெல், ஜான் அட்கின்சன், ஜார்கினா காலண்டர் என 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த இசை நிகழ்ச்சிக்கு தங்கள் மகள்களை அனுப்பி விட்டு, நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களை வீட்டுக்கு திரும்ப அழைத்துக்கொண்டு செல்ல வந்திருந்த போலந்து நாட்டு தம்பதியர், குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்தனர். ஆனால் அவர்களது மகள்கள், குண்டுவெடிப்பில் எந்த பாதிப்புமின்றி தப்பி விட்டனர்.
குண்டுவெடிப்பு நடத்தியவர்
இந்த குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது. இந்த குண்டுவெடிப்பை நடத்தியவர், சல்மான் அபேடி (வயது 22) என தெரியவந்துள்ளது. இவர், லிபிய வம்சாவளி தம்பதியருக்கு மான்செஸ்டரில் பிறந்தவர். சல்போர்டு பல்கலைக் கழக முன்னாள் மாணவர். ஆனால் இவர் தனிப்பட்ட முறையில் இந்த குண்டுவெடிப்பை நடத்தியதாக தெரியவில்லை என்று இங்கிலாந்து உள்துறை மந்திரி ஆம்பர் ரூட் தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தனியார் செய்தி சேனல் ஒன்று கூறி உள்ளது.
உச்சக்கட்ட பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை
இதற்கிடையே இங்கிலாந்து நாட்டில் உச்சக்கட்ட பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பை அந்த நாட்டின் பிரதமர் தெரசா மே வெளியிட்டார். அப்போது அவர், நாட்டில் மேலும் உடனடி தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறினார்.
பொதுமக்களை பாதுகாப்பதற்காக முக்கிய வீதிகளில் ஆயுதம் ஏந்திய போலீசாருடன், ராணுவ வீரர்களும் நிறுத்தப்படுவார்கள். குறிப்பாக பக்கிங்ஹாம் அரண்மனை, டவ்னிங் வீதி, வெளிநாட்டு தூதரகங்கள், வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை போன்ற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
உள்துறை மந்திரி ஆம்பர் ரூட் கூறும்போது, இந்த உச்சக்கட்ட பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை தற்காலிகமானதாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். போலீசாருடன் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரத்து 800 ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.