உலக செய்திகள்

ரனில் விக்ரமசிங்கே பிரதமர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக இலங்கையில் தீவிரமடையும் போராட்டம்

ரனில் விக்ரமசிங்கே பிரதமர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக இலங்கையில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

கொழும்பு,

இலங்கையில் பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே அதிகார மோதல் முற்றிய நிலையில், கடந்த 26-ந் தேதி பிரதமர் பதவியில் இருந்து திடீரென ரனில் விக்ரமசிங்கேயை நீக்கினார், சிறிசேனா. அத்துடன் நில்லாமல், முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராகவும் நியமித்தார்.

மேலும் பிரதமர் இல்லத்தில் உடனடியாக வெளியேற விக்ரமசிங்கேவுக்கு உத்தரவிடப்பட்டதுடன், அவரது பாதுகாப்பும் அதிரடியாக குறைக்கப்பட்டது. இதனால் இலங்கை அரசியலில் திடீர் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் பிரதமர் பதவியில் தானே தொடர்வதாகவும், அதிபரின் முடிவு சட்டவிரோதமானது என்றும் அறிவித்த ரனில் விக்ரமசிங்கே, பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேற மறுத்து விட்டார். மேலும் நாடாளுமன்றத்தை கூட்டி தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அதிபரை அவர் கேட்டுக்கொண்டார்.

ஆனால் இதை தவிர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தை அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி வரை அதிபர் சிறிசேனா முடக்கினார்.இதை ஏற்க மறுத்த சபாநாயகர் கரு ஜெயசூர்யா, அதிபரின் நடவடிக்கையால் நாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படும் என கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக சிறிசேனாவுக்கு கடிதம் எழுதிய அவர், தன்னிடம் ஆலோசனை செய்யாமல் நாடாளுமன்றத்தை முடக்குவது மிகப்பெரும் தவறு என அதில் குறிப்பிட்டு இருந்தார். இதற்கிடையில், ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவையும் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டது. பிரதமராக பதவியேற்ற ராஜபக்சே தனது அலுவல் பணிகளையும் நேற்று துவங்கினார்.

இலங்கையில் நிலவும் இந்த அரசியல் குழப்பம் சர்வதேச நாடுகளை கவலை கொள்ள செய்திருக்கிறது. அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

தீவிரம் அடையும் போராட்டம்

இலங்கையில் ரனில் விக்ரமசிங்கே பிரதமர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, தலைநகர் கொழும்புவில் போராட்டம் நடத்த உள்ளது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அக்கட்சியினர் கோரி வருகின்றன. இலங்கையில், அரசியல் நெருக்கடி முற்றியுள்ள நிலையில், போராட்டம் மேலும் தீவிரம் அடையும் என கூறப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்