சிட்னி,
ஆஸ்திரேலியாவில் சிட்னியில் நேற்று முன்தினம் லிட்டில் வளைகுடா பகுதியில் உற்சாகமாக நீந்திக்கொண்டிருந்த ஆண் ஒருவரை வெள்ளைச்சுறா தாக்கி உயிரிழந்தார். அவரைப்பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
சிட்னி நகரில் நீண்டகாலமாக கடலோர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதால் இப்படி சுறா தாக்குதல் நடைபெற்றிருப்பது அசாதாரணமானதாக பார்க்கப்படுகிறது. 59 ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதுதான் இத்தகைய சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சிட்னியின் பெரும்பாலான கடற்கரைகள் மூடப்பட்டு, நீச்சலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய வெள்ளைச்சுறாவை தேடும் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதில் ஹெலிகாப்டர்களும், டிரோன்களும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த சம்பவத்தையொட்டி நியூசவுத்வேல்ஸ் மாகாண அரசு விடுத்த அறிக்கையில், மனிதரை தாக்கி கொன்ற சுறா ஏறத்தாழ 3 மீட்டர் நீளம் கொண்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை நேரில் கண்ட வழிப்போக்கர்கள் சுறாவின் கொடூரமான, வெறித்தனமான தாக்குதல் பற்றி விவரித்துள்ளனர்.
இதுபற்றி கிரிஸ் லிண்டோ என்பவர் கூறும்போது, அந்த நபர் நீந்திக்கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு சுறா வந்து செங்குத்தாக தாக்கியது என தெரிவித்தார். தாக்குதல் நடந்து 2 மணி நேரத்துக்கு பிறகு கொல்லப்பட்ட மனிதரின் உடல் பாகங்களை மீட்பு படையினர் கைப்பற்றினர். இந்த சம்பவம் சிட்னி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.