உலக செய்திகள்

சோமாலியாவில் நட்சத்திர ஓட்டலில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்; 16 பேர் பலி

சோமாலியாவில் நட்சத்திர ஓட்டலில் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

மொகாதிசு,

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இவர்கள் போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் மொகாதிசுவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கும் நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை அவர்கள் வழக்கமாக கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில் மொகாதிசுவில் கடற்கரையோரத்தில் புதிதாக நட்சத்திர ஓட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு ஏராளமான இளம் பெண்கள் மற்றும் வாலிபர்கள் உணவு அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது தற்கொலை படை பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டலின் நுழைவாயிலில் நிறுத்தி வெடிக்கச் செய்தார். அதன் பின்னர் கார்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே ஓட்டலுக்குள் நுழைந்தனர்.

அங்கு அவர்கள் உணவு அருந்தி கொண்டிருந்த அனைவரையும் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று ஓட்டலை சுற்றி வளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

அதனைத்தொடர்ந்து ஓட்டலுக்குள் இருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

சுமார் 5 மணி நேரம் இந்த துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இறுதியில் தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் பிடியில் இருந்த பிணைக் கைதிகள் அனைவரும் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர்.

எனினும் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை