லாகூர்,
பாகிஸ்தானில் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையான சிறுவன் விளையாடுவதை கண்டித்ததால் தாய், சகோதரன் மற்றும் 2 சகோதரிகளை சுட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தலைநகர் லாகூரில் உள்ள கஹ்னா பகுதியில் 45 வயதான சுகாதாரப் பணியாளர் நஹித் முபாரக் வசித்து வருகிறார். விவாகரத்து பெற்ற இவர் தன்னுடைய 2 மகன்கள் மற்றும் 2 மகள்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த வாரம் நஹித் முபாரக், அவரது மூத்த மகன் தைமூர் மற்றும் இரு மகள்களுடன் இறந்து கிடந்தார். போலீஸ் விசாரணையில் 14 வயதாகும் அவரது இளைய மகன்தான் 4 பேரையும் சுட்டுக் கொன்றுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.
சிறுவன் தனது படிப்பில் கவனம் செலுத்தாமல், பப்ஜி விளையாட்டில் அதிக நேரத்தை செலவழித்து வந்துள்ளான். எனவே நஹித் சிறுவனை கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சிறுவன் தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளான். உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி அவரது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக நஹித் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.